Tuesday, 2 September 2014

அருள்பாலிக்கும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர்

பூவுலக வாசிகளின் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மா. ஆனால் அவருக்கு மண்ணுலகில் ஒரு சில கோயில்கள் மட்டுமே இருக்கின்றன.

அதேசமயம் அநேகமாக எல்லா சிவாலயத்திலும் நான்முகனுக்கு ஒரு சன்னதி இருக்கும் என்றாலும் அங்கே அவருக்கு வழிபாடு நடப்பது அபூர்வம். இந்தியாவிலேயே பிரமாண்டமான பிரம்மா தமிழ்நாட்டில்தான் இருக்கிறார் என்பதும் வியப்புக்குரிய செய்திதானே!
திருச்சிக்கு அருகே உள்ள திருப்பட்டூர் என்ற தலத்தில்தான் பெரிய உருவத்துடன் பிரம்மா அருள்புரிகிறார்.
திருப்பிடவூர் என அழைக்கப்பட்டு தற்போது திருப்பட்டூர் என்று அழைக்கப்படும் ஊரில் உள்ளது, பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர்; இறைவி, பிரம்மநாயகி.
ஆலயம் இந்து ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது.
உள்ளே நுழைந்தால் வேத மண்டபம், நாத மண்டபம், ஆகியவை கடந்ததும் வரும் அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள அருவறையில் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். மண்டூகநாதர், கைலாசநாதர் என்பன இறைவனின் பிற பெயர்கள்.
அன்னை பிரம்ம நாயகிக்கு, பராசக்தி, பிரம்ம சம்பத் கௌரி என்ற பெயர்களும் உண்டு.
பல்லவர் காலம் தொடங்கி நாயக்கர் காலம் வரை பல மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட ஆலயம் இது.
ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 15, 16, 17 தேதிகளில் காலையில் சுமார் 6.30 மணிக்கு சூரிய பகவான் தன் பொற்கதிர்களால் தழுவி பிரம்மபுரீஸ்வரருக்கு ஆராதனை செய்யும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும்.
உட்பிராகாரத்தில் மூலவருக்கு வடபுறத்தில் தனிச் சன்னதியில் ஆறடி உயரத்தில் தியான நிலையில் தாமரை மீது பத்மாசனக் கோலத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார் பிரம்மா.
இந்தியாவிலேயே மிகப் பிரமாண்டமான பிரம்மா இவர்தான்.
வட இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு அருகில் புஷ்கர் என்ற இடத்திலும்; தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் தருவையாறு அருகில் திருகண்டியூரிலும், திருச்சியை அடுத்த உத்தமர் கோயிலிலும்; கரூர் மாவட்டம் கொடுமுடியிலும், திருநெல்வேலி அருகில் பிரம்ம தேசத்திலும், இத்தலத்திலுமாக இந்தியா முழுக்க ஆறு இடங்களில் மட்டுமே பிரம்மாவுக்கு கோயில் அல்லது தனிச்சன்னதிகள் உள்ளது.
இங்கே திருப்பட்டூரில் ஆறு அடி உயரம் ஆறு அடி சுற்றளவில் முன்பக்கம் மூன்று முகங்களும் பின்புறம் ஒரு முகமும் ஆக நான்கு முகங்களுடன் காட்சியளிக்கும் பிரம்மதேவன், தனது வலது கையில் ருத்ராட்ச மாலையையும், இடது கையில் கமண்டலத்தையும் ஏந்திக் காட்சி தரும் அழகைக் காணும் பக்தர்கள் மெய்சிலிர்த்து தம்மை மறப்பது நிஜமே!
திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பிரம்மன் சன்னதியில் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும். பக்தர்கள் தாங்களே அரைத்துத் தரும் மஞ்சள் காப்பில் மங்களகரமாக காட்சி தருகிறார் பிரம்மா.
குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. குருவின் அதிதேவதையான பிரம்மாவின் பார்வை பட்டால் பக்தர்களுக்கு கோடானு கோடி நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


இங்கு அருள்பாலிக்கும் நான்முகனுக்கு தனிக்கதை ஒன்று உண்டு.
படைக்கும் கடவுளான பிரம்மனுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தன.
ஈசனை போல தனக்கும் ஐந்து தலை இருப்பதை எண்ணி அகங்காரம் கொண்டார் பிரம்மா. அழிக்கும் ஈசனைவிட படைக்கும் தனக்கே சக்தி அதிகம் என்று இறுமாப்பு கொண்டார். தன்னைவிட உயர்ந்தவர் யாருமில்லை என்றெண்ணிய பிரம்மா, யாரையும் மதிக்காமல் கர்வம் கொண்டு அலைந்தார்.
அதனைக் கண்ட சிவபெருமான், பிரம்மாவின் அகந்தையை அடக்க எண்ணினார். அவருக்கு சரியான பாடம் புகட்ட முடிவு செய்தார். ஐந்து தலைகள் இருப்பதால்தானே அகம்பாவம் தலை தூக்குகிறது என்று நினைத்த சிவபெருமான், பிரம்மாவின் ஒரு தலையை கொய்துவிட்டார். அதுமட்டுமின்றி அவரிடமிருந்து படைக்கும் ஆற்றலையும் பறித்தார். படைப்பாற்றலை இழந்த பிரம்மா தன் தவறை உணர்ந்தார்.
மன்னிக்கும்படி வேண்டி பல தலங்களில் ஈசனை பூஜித்தார். அந்தத் தலங்களில் பிரம்மாவால் பூஜிக்கப்பட்ட சிவ வடிவங்கள் பிரம்மபுரீஸ்வரர் என்ற நாமகரணத்துடன் அழைக்கப்படுகின்றன.
பிரம்மா இந்தத் திருப்பட்டூரில் துவாதச லிங்கத்தை (12 லிங்கங்கள்) பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தியுள்ளார்.
பிரம்மனின் வழிபாட்டைக் கண்டு மனம் இளகிய சிவபெருமான், படைப்பாற்றலை மீண்டும் அவருக்கு வழங்கினார்.
அதுமட்டுமல்ல, "உன்னை வழிபடுவோர்க்கு விதியிருப்பின் நன்மையைக் கூட்டி அருள்க!' என்ற வரத்தையையும் சிவ பெருமான் பிரம்மாவுக்கு அருளினார்.
திருப்பட்டூரில் உள்ள பிரம்மாவை தரிசிக்கும் விதி யாருக்கு உள்ளதோ அவர்களுடைய விதியை மாற்றவும்; அதனால் அவர்களுக்கு கூடுதல் நற்பலன்கள் கிட்டவும் அருள்புரியும் வரத்தை ஈசனிடம் பெற்றதால் இவரை வழிபடுவோர் வாழ்வு சிறக்கும் என்பது நிச்சியம்.
பிரம்மனுக்கு வரம் அளித்த இத்தலத்து இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார். பிரம்மனுக்கு தேஜஸை வழங்கியதால், அன்னை பிரம்ம சம்பத் கௌரி என அழைக்கபடலானாள்.
பதஞ்சலி சித்தர் வாழ்ந்திருந்த தலம் இது. இவர் இந்தத் தலத்தில் லிங்க உருவில் பிரம்மாவின் அருகில் உள்ளார்.
வடக்குப் பிராகாரத்தில் சண்டிகேசுவரர் சன்னதி அருகே பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி உள்ளது. சித்தர்கள் வாழ்ந்த தலங்களில் மட்டுமே பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி இருக்கும் என்பது வழக்கத்தில் காணப்படும் ஒன்று.
உட்பிராகாரத்தில் கற்பக வினாயகர், பழமலைநாதர், கந்தபுரீசுவரர், கஜலட்சுமி, நடராஜர் சபை, கால பைரவர், சூரியன் சன்னதிகள் உள்ளன.
தேவக்கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் திருமேனிகள் உள்ளன.
அம்மன் சன்னதிக்கு அருகே தாயுமானவர் சன்னதி, பிரம்ம தீர்த்தம், பகுள தீர்த்தம் உள்ளன.
அம்மன் சன்னதியை அடுத்துளள வெளிவட்டத்தில் சப்தரிஷீசுவரர், காளத்திநாதர், ஐம்புகேசுவரர், அருணாசலேசுவரர், ஏகாம்பரேசுவரர், மண்டூகயநாதர் ஆகியோரது சன்னதிகள் தனித்தனியே உள்ளன.
ஆலயத்தின் தல விருட்சம் மகிழ மரம்.
இந்த ஆலயத்தில் உள்ள நாத மண்டபத்தின் கல்தூண்களைத் தட்டினால் மனதை வருடும் மெல்லியநாதம் எழுந்து நம்மை சிலிர்க்க வைக்கும்.
இங்கு அருள்பாலிக்கும் பிரம்மன் தன்னை தரிசித்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் தலையெழுத்தை நல்ல விதமாக மாற்றி எழுதி அவர்களது நல்வாழ்க்கைக்கு வழிகோலுவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
திருச்சி - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர் என்ற இத்தலம்.

No comments:

Post a Comment