Sunday, 7 September 2014

நமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள் பகுதி -- 6



வேட்டி கட்டும் பழக்கம் இன்னும் கிராமம் மற்றும் சிறுநகரங்களில் பரவலாகக் காணப்படுகிறது.பேண்ட் அணிபவர்கள் கொஞ்சம் நாகரீகம் மிக்கவர்களாகவும்,ஜீன்ஸ் அணிபவர்கள் ‘யூத்’களாகவும் கருதப்படுகிறார்கள்.தமிழ்நாட்டு தட்பவெப்பநிலைக்கு ஏற்ற ஆடை பருத்தியால் நெய்யப்பட்ட ஆடைகளே! பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள்,கைலி கட்டும் பழக்கத்தில் பல நூறு ஆண்டுகளாக இருந்துவந்தனர்.அவர்களைக் கூட பேண்ட்,ஜீன்ஸ் அணிய வைத்த புண்ணியவான்கள் நமது தமிழ்த் திரைப்பட இயக்குநர்களே!

தாம் இயக்கும் திரைப்படங்களில் கதாநாயகன் படிக்காதவனாக இருந்தால் கூட அவனுக்கு பேண்ட் அணிவித்து, ‘அழகு’ பார்க்க ஆரம்பித்தனர்.இந்தப் பழக்கம் 1991களில் சின்னத்தம்பி முதலான திரைப்படங்களில் துவங்கியது.இன்றோ கைலியையும் காணவில்லை;வேட்டியையும் காணவில்லை;திருமண மாப்பிள்ளையாக ஆகும் தமிழ் இளைஞர்கள் கூட தமிழ்நாட்டில் வேட்டி கட்டுவதில்லை;காரணம் அவர்களுக்கு வேட்டி கட்டத் தெரியாது;நமது தமிழ்ப் பண்பாட்டையும்,இந்து தர்மத்தையும் பாதுகாக்க விரும்பினால் வேட்டி கட்டும் பழக்கத்தைக் கைவிடாமல் இருக்க வேண்டும்;கைலி அணிவது இஸ்லாமியர்களின் பண்பாடு ஆகும்.பேண்ட் குளிர்ப்பிரதேச நாடுகளில் இருக்கும் பழக்கம் ஆகும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்று நாம் ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைக்கிறோம்.அதுதான் நாகரீகம் என்றும் நம்புகிறோம்.ஆனால்,ஆங்கிலத்தில் மட்டும் பேசுவது அடிமைத்தனத்தின் உச்சம் என்பதை நாம் உணருவதில்லை;அந்த அளவுக்கு மேல் நமது தமிழ் மொழியின் பெருமைகள்,இந்து தர்மத்தின் சாதனைகள் நம்மிடமிருந்தே மறைக்கப்பட்டு வருகின்றன.தமிழ் மொழியின் பெருமைகளை அறிய சாண்டில்யன் எழுதிய கடல்புறா,விலைராணி போன்ற வரலாற்று நாவல்களை வாசிக்க வேண்டும்;தமிழ் மொழியில் இருக்கும் தெய்வீக ரகசியங்கள் உலகில் வேறு எந்த மொழி இலக்கியங்களிலும் இல்லை;தமிழ் மொழியே ஒரு மந்திர மொழி!இந்தியாவின் தாய்மொழி சமஸ்க்ருதம்;இந்தியாவின் தந்தை மொழி நமது தமிழ் மொழி!!!

சமஸ்க்ருதம் பிராமணர்களுக்கு மட்டுமே சொந்தமான மொழி என்ற கருத்து கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பரப்பப் பட்டிருக்கிறது.ஆனால்,அது முழுப்பொய் ஆகும்.நமது பாரத நாடு சுதந்திரம் அடைந்த போது 56 நாட்டு ராஜாக்கள் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அதுவரையிலும் இரண்டு பாரத நாட்டின் ராஜாக்கள் சந்திக்கும் போது சமஸ்க்ருதத்திலேயே பேசிக்கொண்டனர்.சுமாராக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழி இன்றைய ஆசியக் கண்டம் முழுவதும்(இன்றைய இந்தியா,திபத்,சீனா,பாகிஸ்தான்,வங்காளதேசம்,மலேஷியா,சிங்கப்பூர்,  இலங்கை,ஆஸ்திரேலியா)பரவியிருந்தது;தமிழ் மொழிக்கு நிகராகவும் சமஸ்க்ருத மொழி பரவியிருந்தது;

இந்து தர்மத்தின் பெருமைகளை நாம் அறிந்து கொண்டோமோ இல்லையே நமது எதிரியான கிறிஸ்தவ ஆங்கிலேயன் நன்றாகவே அறிந்து வைத்திருந்தான்.அதனால்,நமது நாட்டு மக்களுக்குள்ளாக பிரிவினையை உருவாக்கிட ஏராளமான பொய்களையும்,புரட்டுக்களையும் விதைத்தான்;அது இன்று ஆலவிருட்சமாக வளர்ந்து ஜாதிக் கட்சிகளாகவும்,மாநில வெறியாகவும்,மாநில சுயநலமாகவும்,வட்டார கட்டைப்பஞ்சாயத்தாகவும்,அரசுப் பணிகளில் ஜாதிப் பாசமாகவும் வளர்ந்து கொண்டிருக்கிறது.



இன்னும் நாம் நமது இந்து தர்மத்தின் பெருமைகளில் பத்து சதவீதம் கூட உணரவில்லை;அதற்குரிய புத்தகங்களை அறிந்து கொள்ளவில்லை;ஓஷோ எழுதிய நான் நேசிக்கும் இந்தியா,ஓஷோவின் பேச்சுக்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் மறைந்திருக்கும் உண்மைகள்,கவியரசு கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம்;காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களின் பேச்சுக்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் தெய்வத்தின் குரல்;விவேகானந்த கேந்திரம்,கன்னியாக்குமரி வெளியிட்டிருக்கும் விழிமின் எழுமின்;ஸ்ரீராமக்ருஷ்ணமிஷன்=சென்னை வெளியிட்டிருக்கும் சுவாமி விவேகானந்தரின் கர்மயோகம்;திருஅண்ணாமலையில் இருக்கும் ரமண மகரிஷியின் வெளியீடுகள்;சக்தி புத்தக நிலையம் வெளியிட்டிருக்கும் இந்து தர்மத்தின் விஞ்ஞானச் சாதனைகள்(இவை மறுபதிப்பாக வெளிவரவில்லை;);Hindu Vedic World Heritage, The Rising and Falling of Great Power of this World(Oxford University Press);Yuwa Bharathi=Monthly Magazine from Chennai.பால் பிராண்டன் எழுதிய ரமணமகரிஷி பற்றிய சில ஆங்கில புத்தகங்கள்,எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் எழுதிய கூடு என்ற நாவல்;தாமரை நூலகம் வெளியீடுகள்,நூறு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் செயல்பட்டுவந்த திராவிடப் பதிப்பக வெளியீடுகள்,இன்றைய நர்மதா பதிப்பகம்,இந்து பப்ளிகேஷன்ஸ் மற்றும் வேறு சில பதிப்பகத்தின் ஆன்மீகம் மற்றும் பக்தி சார்ந்த வெளியீடுகளில் புதைந்து கிடக்கின்றன;நாகப்பட்டிணத்தில்  சில ஆண்டுகள் முன்பு வரை செயல்பட்டுவந்த குமரிப் பதிப்பக வெளியீடுகள் அனைத்தும் நமது பெருமைகளை வெளியிட்டுக் கொண்டே இருந்தன;
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


எங்காவது பாழடைந்த சிவங்கம் கிடந்தால்,அதை ஒருசிலர் முறையாகப்பராமரித்து வருகின்றனர்;சிலர் சொந்தமாக சிவாலயமே கட்டி வழிபட்டுவருகின்றனர்;எப்படிப் பார்த்தாலும்,அப்படி பராமரிப்பதற்கே பல ஜன்மங்களாக பூர்வபுண்ணியம் வேண்டும்;பராமரிக்க ஆரம்பிக்கும் போது நமது கர்மவினைகள் சிவ வழிபாட்டை தொடர்ந்து செய்யவிடாமல் தடுக்கும் என்ற பொய்யான நம்பிக்கை பல நூற்றாண்டுகளாக பரப்பப் பட்டிருக்கிறது;சிவனை நெருங்க,நெருங்க நமது மன உறுதி அதிகரிக்கும்;ஆத்மபலமும் அதிகரிக்கும்;என்பதே உண்மை.
வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் பூர்வபுண்ணியத்தாலோ,விதிவசத்தாலோ கிராமங்களில்,தொலைதூர காட்டுப் பகுதிகளில் இருக்கும் சிவன் கோவிலுக்கு பூசாரியாக சிலபலர் வந்துவிடுகின்றனர்.அவர்களுக்கு மட்டுமே இந்தப் பதிவு வெளியிடப்படுகிறது;


சிவலிங்கத்திற்கு அருகில் செல்லும் பாக்கியம் கிடைத்தாலும் சரி;சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் பாக்கியம்(பூசாரி) கிடைத்தாலும் சரி:பின்வரும் விதமாகத் தான் சிவலிங்க அபிஷேகம் செய்ய வேண்டும்;முதலில் நீரால் அபிசேகம் செய்ய வேண்டும்;பிறகு பால்,தயிர்,மஞ்சள்,திரவியப்பொடி,பஞ்சாமிர்தம்,நார்த்தங்காய்ச் சாறு,விபூதி,அரிசிமாவு,சந்தனம் என்ற வரிசையில் அபிஷேகம் செய்ய வேண்டும்.ஒவ்வொரு பொருளாலும் அபிஷேகம் செய்யும் போது சிவமந்திரங்களை/சிவமந்திரங்களில் ஏதாவது ஒன்றை(அபிஷேகம் செய்பவரும்) மனதுக்குள் ஜபிப்பது அவசியம்;உதாரணமாக,ஓம்நமச்சிவாய என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.ஒவ்வொரு பொருளால் அபிஷேகம் செய்து முடித்ததும் தண்ணீராலும் அபிஷேகம் செய்ய வேண்டும்.இறுதியாக ருத்ராட்சத்தால் அபிஷேகம் செய்யலாம்;பல நூற்றாண்டுகளாக இந்த வழக்கம் இருந்திருக்கிறது.தற்போது,தமிழ்நாட்டில் ஒருசில ஆலயங்களில் மட்டும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ருத்ராட்ச அபிஷேகம் செய்துவருகின்றனர்.


இதைத் தொடர்ந்து கிராமக்கோவில் பூஜாரிகள் பேரவை என்ற அமைப்பில் இருந்து ஒரு வருடத்துக்கு ஓரிரு முறை எப்படி பூஜை வைப்பது? என்பதற்கான பயிற்சி முகாம்களை தமிழ்நாட்டில் நடத்திவருகின்றனர்;அதில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்;அல்லது ஆதீனங்கள் நடத்தும் பூஜாரிகளுக்கான பயிற்சி முகாம்களிலும் கலந்து கொள்ளலாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


நமது ஐம்புலன்களில் மிகவும் சக்தி வாய்ந்தவை கண்களும்,காதுகளுமே!!! இந்த இரண்டையும் நமது மனவலிமையால் கட்டுப்படுத்த பழகிக் கொண்டால்,மற்ற மூன்றுமே தாமாகவே கட்டுக்குள் வந்துவிடும்; யார் என்ன சொன்னாலும் நம்பி அதன் அடிப்படையில் இறங்கிச் செயல்படும் அப்பாவிகளே தமிழ்நாட்டில் அதிகம்;இதனால் தான் ஏமாற்றுபவர்கள் பெருகிக் கொண்டே இருக்கிறார்கள்;ஆக,காது தான் பிறர் சொல்லும் அனைத்துக் கருத்துக்களையும் ‘கேட்டு’ நமது மனதுக்குள் செலுத்துகிறது;எனவே, ‘கேட்பதில்’ கவனமாக இருக்கப் பழக வேண்டும்;
அடுத்து கண்கள்!!!


நமது மனம் செயல்படுவதே கண்களைக்கொண்டுதான்! மனம் இரண்டு பெரும்பிரிவுகளாக இருக்கின்றன;ஒன்று மேல் மனம்,அடுத்தது ஆழ்மனம்! ஒரு நாளில் நாம் குறைந்த பட்சம் 17 மணி நேரமும்,அதிகபட்சம் 20 மணி நேரமும் விழித்திருந்து பலவிதமான வேலைகள்,தொழில் செய்துவருகிறோம்;இந்த விழித்திருக்கும் நேரத்தில் நமது ஆழ்மனம் அவ்வப்போது விழிக்கும்;எப்போது விழிக்கும் என்பதை மனம் சார்ந்த ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்;அப்படி விழிக்கும் நேரத்தில் நாம் பார்க்கும் காட்சிகளை நமது கண்கள் மூலமாக மனதினுள் வழியாக ஆழ்மனமானது உள்வாங்கிக் கொள்கிறது.இப்படி உள்வாங்கும் காட்சிகள் பிற்காலத்தில் கனவுகள் உருவாகவும்;பகல் கனவாகத் தோன்றவும் செய்கின்றன;ஏக்கங்கள் தோன்றவும்;நமது வாழ்க்கை லட்சியத்தின் மீது வெறியாகவும் மாறுகிறது.பழிவாங்கும் உணர்ச்சியும்,பாச உணர்ச்சியும்,காமக் கிளர்ச்சியும்,விட்டுக்கொடுத்தலும்,உற்சாகமும் தோன்ற கண்களே காரணம்.ஆதிகாலத்தில் மனிதன் இருந்த நிலையை இன்று நினைக்கும்போதெல்லாம் பார்க்கும் சூழ்நிலையை இணையத் தொழில்நுட்பம் எளிதாக்கிவிட்டது;



கண்களுக்கும்,காதுகளுக்கும் கிளுகிளுப்பு தரும் எதையும் பார்ப்பதைத் தவிர்க்கவும்;நமது கர்மவினைகள் தீரவும்,நமது சந்ததியினர் செல்வச் செழிப்புடனும்,நிம்மதியுடனும் வாழவும் பக்தியை வளர்க்கவும்;ஆன்மீகக்கடலில் சொல்லப்படும் ஆன்மீக ரகசியங்கள் ஒரு லட்சம் கோடிகளில் ஒரு பங்குதான்.எனவேதான், இந்த வலைப்பூவுக்கு ஆன்மீகக் கடல் என்று பெயர் வைத்து இருக்கிறோம்.


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment