Sunday, 7 September 2014

தினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள் -- 9


கோவிலுக்குச் செல்லும் நாம்,தேங்காய் உடைக்கவும்,அர்ச்சனை செய்யவும் பூக்களையும்,பழங்களையும் வாங்கிக் கொண்டு செல்கிறோம்.நமக்கு இருக்கும் பிஸிக்கு நாம் செய்வது என்ன? கோவிலுக்கு வெளியே இருக்கும் பழக்கடையில் தட்டோடு தேங்காய் பழங்கள்,வெற்றிலைப் பாக்கு வாங்கிக் கொண்டு கோவிலுக்குள் சென்று பூசாரியிடம் அப்படியே தந்துவிடுகிறோம்.இதனால்,கோவிலுக்கு வெளியே கடைவைத்திருப்பவரும்,கோவிலுக்குள்ளே இருக்கும் பூசாரியும் மேலும் மேலும் பொருளாதாரத் தன்னிறைவை அடைந்து கொண்டே இருக்கின்றனர்.நாம் அப்படியே இருக்கிறோம்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
பழக்கடையில் வாங்கும் அர்ச்சனைத் தட்டை கோவிலுக்குள் கொண்டு சென்றதும்,அதில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் நமது கைகளால் தொட்டு பூசாரியிடம் தர வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே நமது கோரிக்கைகள் நிறைவேறும்;இல்லாவிட்டால் பூசாரி மற்றும் கோவிலுக்கு வெளியே கடைவைத்திருப்பவர்களின் கோரிக்கைகளே நிறைவேறும்.

இன்று பலர் காசிக்கும்,கேதார்நாத்,பத்ரிநாத் முதலான புராதனம் நிறைந்த ஆலயங்களுக்கு 30 வயதுக்கு முன்பாகவே சென்று வருவது வழக்கமாகிவிட்டது;இந்த ஆலயங்களுக்குச் செல்லும் தகுதியே 40 முதல் 50 வயதுக்குப்பிறகே துவங்குகிறது;இன்று தமிழ்நாடு முழுவதுமே நான் காசிக்கு பத்து முறை போய் வந்திருக்கிறேன்;பத்ரிநாத்துக்கு முப்பது முறை போய்வந்திருக்கிறேன்; என்று பெருமையடித்துக் கொள்கின்றனர்;இவ்வாறு போவதும் தவறு;போய்விட்டு வந்து இத்தனை முறை போய் வந்தேன் என்று பீற்றிக் கொள்வதும் தவறு.

இமயமலைப்பகுதிகளில் இருக்கும் பல ஆலயங்களுக்குச் செல்வதற்கு முன்பு,நம்மை ஆன்மீகரீதியாக தகுதி படுத்திக் கொண்ட பின்னரே செல்ல வேண்டும்;இவ்வாறு தகுதிபடுத்தியப் பின்னரே செல்ல வேண்டும் என்பதை எடுத்துச் சொல்வதற்குக் கூட தற்காலத்தில் ஆன்மீக குருநாதர்கள்,மடாதிபதிகள் போதுமான அளவுக்கு இல்லை;இதற்கு மூல முதற்காரணம்,கிறிஸ்தவ ஆங்கிலேயன் நம்மை 300 வருடங்களாக ஆள்கிறேன் என்ற பெயரில் கொள்ளடித்த காலத்தில் உருவாக்கிய கல்வித் திட்டமே! அந்தத் திட்டத்தின் பெயர்தான் மெக்காலே கல்வித் திட்டம்.



இந்த மெக்காலே கல்வித்திட்டமானது நமது மனதை மலரச் செய்வதைத் தடுக்கிறது;எந்த ஒரு பிரச்னையையும் எதிர்கொள்ளத் தெரியாமல் தடுமாற வைக்கிறது;வெட்டிப் பந்தாவை வளர்க்கிறது;தன்னை மிக உயர்வாகவும்,பிறரை மிகக் கேவலமாகவும் நினைக்க வைக்கிறது;
நமது இந்து தேசத்தின் பெருமைகளை நாம் அறியாமல்  இருக்கும் விதமாகவும்,மேல்நாடுகளின் பண்பாடுகளே உயர்ந்தவை என்பதை நம்பும்விதமாகவும்,நமது முன்னோர்களாகிய ரிஷிகள்,துறவிகள்,சாதுக்கள்,சித்தர்களை முட்டாள்களாகவும் நினைக்கக் கூடிய விதமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.கடந்த ஆறு தலைமுறைகளாக இந்த மெக்காலே கல்வித் திட்டமானது இந்தியாவில் தோலால் மட்டும் இந்தியர்களாவும்,சிந்தனையால் கிறிஸ்தவ ஆங்கிலேயர்களாகவும் செயல்படும் விதமாகவும் மாற்றியிருக்கிறது.இதை உணர்ந்தே அப்போதே(கி.பி.1800களில்) சுவாமி விவேகானந்தர்,ராஜாராம் மோகன்ராய் போன்றவர்கள் மெக்காலே கல்வித் திட்டத்தை எதிர்த்துள்ளனர்;

அதன் தொடர்ச்சியே இன்று தமிழ்நாட்டில் மாவட்டம் தோறும் ஆங்கில வழிக்கல்வியை ஒன்றாம் வகுப்பில் இருந்தே கொண்டு வர வழிவகுத்துள்ளது.தமிழ் உணர்வுடன் அரசியல் பேசுபவர்களாக இருந்தாலும் சரி,நாத்திகத்தை அரசியல் கொள்கையாகக் கொண்டு கட்சி நடத்துபவர்களாக இருந்தாலும் சரி,நமது பண்பாட்டிலிருந்தே நமது அடுத்த தலைமுறையைப் பிரிக்கும் இந்த சர்வதேச சதித் திட்டத்துக்கு நாம் உடன்படக்கூடாது.ஒரு ஜீன்ஸ் துணியைத் தயார் செய்ய 10000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.நமது ஹீரோக்கள் டூயட் பாட ஜீன்ஸ் அணிய,நாமோ மேல்நாடுகளுக்கு (நாம் ஜீன்ஸ் வாங்குவதன் மூலமாக)வருமானத்தைப் பெருக்க வழிவகுக்கிறோம்;
தண்ணீர்,மோர்,இளநீர் போன்றவை குடிப்பதை கேவலமாக நினைக்கும் விதமாக டிவி விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகின்றன;இதனால்,கோக்கோடு பார்த்தால் தான் ஹ்ரித்திக் ரோஷன் தெரிவாராம்;கொஞ்சம் கலாட்டா பண்ண ஆரஞ்சு நிற டாய்லெட் கிளீனிங் திரவத்தை குடிக்க வேண்டுமாம்;அதுக்கு கிறிஸ்தவ நடிகையின் ரெக்கமண்டேஷன் வேற!

சமீபகாலமாக  பெர்க் விளம்பரம் இந்துதர்மத்தின் அடிப்படையான திருமணத்தைக் கொச்சைப்படுத்துகிறது.ஓடிப்போய் திருமணம் செய்யும் ஒரு இளம் தம்பதியை கிண்டல் செய்கிறது.நாமும் வெட்கமில்லாமல் அதையும் பார்த்து,ரசித்து,சிரித்துக் கொண்டிருக்கிறோம்.உலகிலேயே நமது தனது முன்னோர்களின் பண்பாட்டை நக்கலடிப்பதை அனுமதிக்கும் ‘பரந்த’ மனப்பான்மை நமக்கு மட்டுமே உண்டு.

சிலர் ஒரே நாளில் அல்லது இரண்டு மூன்று நாட்களில் பத்து கோவில் அல்லது பதினைந்து கோவில்களைப் பார்க்க வேண்டும் என்ற ‘லட்சியத்துடன்’ பயணிக்கின்றனர்.போகும் இடத்தில் அந்தந்தக்கோவில்களின் ஸ்தலப்புராணத்தை வாங்குகிறார்களா? கோவில் பூசாரியிடம் அந்தக் கோவிலின் பெருமைகளைக் கேட்கிறார்களா? பூசாரியை மரியாதையுடன் நடத்துகிறார்களா?

 இறைவனிடம் நமது கஷ்டங்களை முறையிட வந்த இடத்தில் பூசாரியிடமும் நமது ‘அரசியல் செல்வாக்கை’ நிரூபிக்க முயலுகிறோம்;அல்லது நமது திமிர்த் தனத்தைக் காட்டிட எத்தனிக்கிறோம்;இப்படிப்பட்டவர்களுக்கு அடுத்த ஜன்மத்தில் குருதோஷம் ஏற்படும்;நல்ல தொழில் அல்லது வேலை வாய்ப்பை கடைசி நொடியில் இழந்துவிடுவர்;இன்னும் சிலர் மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அது முடியும் வரையிலும் காத்திருக்காமல் உடனே தீபாராதனை காட்டச் சொல்லி பூசாரியையே மிரட்டுவதும் நடக்கிறது.இது மாபெரும் தவறு.இம்மாதிரியான ஆட்களால் தான் ஒழுக்கமாகவும்,சிரத்தையாகவும் இருக்கும் பூசாரிகள் வில்லங்கமானவர்களாக மாறுகின்றனர்.இந்த பதிவினை வாசித்தப் பின்னராவது அப்படிப்பட்ட சுபாவமுடையவர்கள் மனம் மாறினால் அது நல்லது.


முற்பிறவிகளில் ஊழல் பேர்வழிகளாக இருந்தவர்கள் பல பிறவிகளாக நாயாக பிறந்து அவதிப்படுவார்கள்;இதை கேரளாவின் ஆன்மீக மகான் ஸ்ரீநாராயணகுருவின் குருவான சட்டம்பி சுவாமிகள் சொல்லியிருக்கிறார்.ஆதாரம்:விஜயபாரதம்,பக்கம் 2, 6.9.13


இயக்குநர் சேரனின் மகள் தாமினி தனது பெற்றோருடன் வீட்டுக்குத் திரும்பக் காரணம் என்ன தெரியுமா?
ஆதலினால் காதல் செய்வீர் என்ற படத்தை தாமினி பார்த்ததாகவும்,அதன் பின்னர் தமது தவற்றை உணர்ந்ததாகவும்,அதனால் தனது பெற்றோருடன் மனம் திரும்பி வாழ சம்மதித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.அவ்வளவு அருமையான படம் ஆதலால் காதல் செய்வீர்!


நாம் ஒவ்வொரு முறையும் சாப்பிடுவதற்கு முன்பும் சில விநாடிகளுக்கு அந்த உணவை இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டே சாப்பிடப்பழக வேண்டும்;இதன் மூலமாக நாம் வழிபடும் இறைவனின் அருள் விரைவாகக் கிடைக்கும்;
சாஸ்திரம் அறிந்தவர்கள் சாப்பிடும் முன்பு,அதற்குரிய மந்திரத்தை ஜபித்துவிட்டு சாப்பிடத் துவங்கலாம்;
சாஸ்திரம் அறியாதவர்கள்,நமது குலதெய்வத்துக்கோ அல்லது ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கோ மனதுக்குள் ‘ஸ்ரீகாலபைரவப்பெருமானுக்கு அர்ப்பணம்’ என்று ஒருமுறை நினைத்துவிட்டுச் சாப்பிடலாம்;அல்லது   ‘எனது (குலதெய்வம்)த்துக்கு அர்ப்பணம்’ என்று ஒருமுறை நினைத்துவிட்டு சாப்பிட ஆரம்பிக்கலாம்;

கேக்கின் மீது மெழுகுவர்த்தி ஏற்றி,அதை ஊதி அணைத்து பிறந்த நாள்  கொண்டாடுவது மாபெரும் தவறு.நமது இந்துச் சம்பிரதாயப்படி, ஒரு விளக்கு/மெழுகுவர்த்தியை ஊதி அணைப்பது துக்கநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்குச் சமமானது  ஆகும்;
நமது பிறந்த நட்சத்திரம் வரும் நாளைக் கண்டறிந்து,அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று கோவிலுக்குள்ளே தீபம் ஏற்றிவிட்டு,ஏதாவது ஒரு மந்திரத்தை 9 முறை அல்லது 108 முறை ஜபித்துவிட்டு,கோவிலை விட்டு வெளியே வரும்போது அன்னதானம் அல்லது ஆடை தானம் அல்லது சொர்ணதானம்(நாணயங்களையோ,ரூபாய்த் தாள்களையோ) செய்வதன் மூலமாக பிறந்த நாளைக்  கொண்டாடலாம்;இதுவே இந்து முறைப்படியான பிறந்தநாள் கொண்டாடும் முறை!!!

பல குடும்பங்களில் வீட்டுப்பெரியவர்கள் தமது வாழ்நாளிலேயே தமது வாரிசுகளுக்குச் சொத்துக்களைப் பிரித்துத் தர நினைக்கின்றனர்;ஆனால்,வாரிசுகளில் யாராவது ஒருவர் அல்லது சிலர் சொத்துப் பிரிப்பதில் குழப்பத்தை உண்டாக்கிவிடுகின்றனர்;இதனால்,வீட்டில் பெற்றோரில் யாராவது ஒருவர் இறந்ததும்,அவர்களை அடக்கம் செய்யும் நாளில் சொத்துக்காக உடன் பிறந்தவர்களுடன் சண்டையிடுகின்றனர்;இதனால்,அவர்களுக்கு பிரேதசாபம் என்ற கொடூரமான சாபம் உண்டாகிறது.எனவே,இது மாபெரும் தவறு ஆகும்.

எந்த கோவிலாக இருந்தாலும்,கோவில் வளாகத்திற்குள்ளாக இறைவன்,இறைவியைத் தவிர யாரையும் கையெடுத்துக் கும்பிடக்கூடாது;கோவிலின் கொடிமரத்தின் அருகே மட்டுமே விழுந்து கும்பிட வேண்டும்;கொடிமரத்தைத் தாண்டியப் பின்னர் வேறு  எங்கேயும் இவ்வாறு விழுந்து கும்பிடக் கூடாது;கோவிலுக்குள்ளே ஒருபோதும் அனாவசியமான பேச்சுக்கள் பேசக் கூடாது;செல்போனில் பேசவும் கூடாது.கோவிலை விட்டு வெளியே வந்து வீடு திரும்பும் வரை பேசாமல் இருந்தால்(இந்த விதி உள்ளூர் கோவில்களுக்கு மட்டுமே பொருந்தும்) மிகவும் பரிபூரணமான கோவிலின் சக்தியை உள்வாங்கியிருப்பதை வீட்டுக்குள் நுழைந்ததும் உணர்வீர்கள்.

உளவுப்பணிகளுக்காக உருவாக்கப்பட்ட அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட ஆர்பாநெட்டே(ARPANET) இன்று உலகளவில் இணைய தொழில்நுட்பமாக வளர்ந்திருக்கிறது.இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே ஒவ்வொரு நாட்டின் அனைத்துத் தகவல்களையும் திருடுவதற்காக உருவாக்கப்பட்டதே முகநூலும்,கூகுளாண்டவரும்,இணைய நெட்வொர்க்கும்!!!சீனா ஏன் கூகுளாண்டவரை தனது நாட்டிற்குள் அனுமதிக்காமல் துரத்தியது என்பது இப்போது புரிகிறதா?

தனக்குப் பிறகு உலகில் வேறு எந்த நாடும் வல்லரசாகிவிடக்கூடாது என்பதில் அமெரிக்கா தெளிவாக இருக்கிறது;அதனால் தான் தொழில்நுட்பப் பரவல் என்ற பெயரில் அதீத சிருஷ்டிப்புத் திறனை ஆயுதமாகப்பயன்படுத்தி,உலக நாடுகளின் இளமையை நாசமாக்கிக் கொண்டிருக்கிறது.நாமும் அதை பெருந்தன்மையோடு அனுமதித்துக் கொண்டிருக்கிறோம்.

கொஞ்சம் சிந்தியுங்கள்;சிந்திப்பதற்கு உங்கள் செல்போனை அணைத்து வையுங்கள்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment