Monday, 8 September 2014

தினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடமைகள் -- 13


மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருமே ஞானியாக முடியும்;சித்தராக முடியும்;தெய்வமாக முடியும்.தாம் விரும்பும் விதமாக ஆவதற்கு முதல் தேவை தன்னம்பிக்கை! அடுத்த படியாக நாம் எப்படி ஆக விரும்புகிறோமோ அப்படியே ஆகிவிட்டது போல அடிக்கடி கற்பனை செய்து கொண்டே இருக்க வேண்டும்;

உதாரணமாக,நாம் ஒரு தொழிலதிபராக ஆக விரும்புகிறோம் என்று வைத்துக் கொள்வோம்;நாம் செய்ய வேண்டிய முதல் வேலை:-நமது நட்பு வட்டத்தில் இருக்கும் தொழிலதிபர் ஒருவரிடம் நெருங்கிப் பழகுவதுதான்;அவருடன் உரிமையுடன் பேசிப்பழகியப் பின்னர்,அவரோடு ஒரு நாள் முழுவதும் பயணிக்க வேண்டும்;காலையில் அவர் எப்போது எழுந்திருக்கிறார்? என்ன செய்கிறார்? யார் யாரை சந்திக்கிறார்? எப்படி ஒவ்வொருவரிடமும் பேசுகிறார்? என்பதை ஒருநாள் முழுவதும் கவனித்துக் கொள்ள வேண்டும்.நமது உள்மனதுக்குள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.மறுநாளில் இருந்து தினமும் 15 நிமிடம் அந்தத் தொழிலதிபரைப் போல நமது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

எதை அடிக்கடி நாம் நினைத்துக் கொண்டே இருக்கிறோமோ அதாகவே நாம் அடுத்த சில மாதங்கள் அல்லது வருடங்களில் ஆகிவிடுவோம்;இப்படிச் செய்வதால்,நமது லட்சியம் வலுப்பெறும்;
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சுவாமி படங்களுக்கு செம்புத் தகடும்,செம்பு ஆணியும் போட்டு பிரேம் போட வேண்டும்;அப்படிச் செய்து மர பெஞ்ச் அல்லது  மர படிக்கட்டுகள் வைத்து வழிபட்டு வந்தால் அந்த சுவாமியின் அருள் முழுமையாக நமக்குக் கிடைக்கும்;தற்போது இரும்புத் தகடும்(வசதியானவர்கள் தங்கத் தகடும்),இரும்பு ஆணியும் போட்டுத் தருவதால் தெய்வ அருள் நமக்குக் கிடைப்பதில்லை;எனவே,பிரேம் கடை வைத்திருப்பவர்கள் சுவாமிப் படங்களுக்கு செம்புத் தகடும், செம்பு ஆணியும் போடப் பழகவும்;பூஜை அறையில் ஒரே ஒரு இரும்புப் பொருள் இருந்தாலும் சுவாமியால் சூட்சுமமாக வீட்டுப் பூஜை அறைக்கு வரமுடியாது;நள்ளிரவு நேரத்தில் நமது வீட்டுப் பூஜையறையில் சந்தன மணம் அல்லது நெய் மணம் அல்லது ஜவ்வாது மணம் அல்லது பூவின் மணம் வரும்;சில வீடுகளில் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த மணம் வருவதை நம்மில் பலர் உணர்ந்திருப்பர்;

எப்போதும் சுவாமியின் படத்துக்கு முன்பாக கொஞ்சம் டயமண்டு கல்கண்டு,கொஞ்சம் தண்ணீர்(நிறைகுடத்தில் இருந்து எடுக்கப்பட்டது) நைவேத்தியமாக வைத்திருக்க வேண்டும்;தினமும் அல்லது வெள்ளிக்கிழமை தோறும் நைவேத்தியத்தை புதியதாக மாற்றி வைக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் நள்ளிரவு அல்லது பிரம்ம முகூர்த்த நேரத்தில் இவைகளைச் சாப்பிடவும்,தண்ணீரை அருந்தவும் வரும்;அவ்வாறு ஒரே ஒருமுறை வந்தாலே நமது சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்;

பூஜை அறையில் இரும்புப் பொருட்கள் இருந்தால் சுருட்டு வாடை,புகையிலை வாடை,வத்தல் வாடை,கருவாட்டு வாடை தான் வரும்;நமது குல தெய்வம் சிறுதெய்வங்களாக இருந்தால் பரவாயில்லை;ஆனால்,ஒவ்வொருக்கும் ஒவ்வொரு குலதெய்வம் இருக்கிறது;எனவே,பூஜையறையில் ஒருபோதும் இரும்புப் பொருட்கள் இருக்கவே கூடாது.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ஜோதிடர்கள் ஒருபோதும் மது அருந்தக் கூடாது;அசைவம் சாப்பிடக்கூடாது;போதையூட்டும் பாக்குகளைப் பயன்படுத்தக் கூடாது;தனது வாழ்நாளில் குறைந்த பட்சம் 12 பேர்களுக்கு தனது கலையை கண்டிப்பாக கற்றுத் தர வேண்டும்;ஒருவனுக்கு ஒருத்தி,ஒருத்திக்கு ஒருவன்(பெண் ஜோதிடர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது) என்ற கொள்கையில் உறுதியாக ஒவ்வொரு நாளும் இருக்க வேண்டும்;மனதைக் கிளுகிளுப்பூட்டும் படங்களைப் பார்க்கக்கூடாது;அதுபோல,எவரிடமும்,எந்தச் சூழ்நிலையிலும் பேசக்கூடாது;அவ்வாறு பேசுவதை ஊக்குவிக்கக் கூடாது;ஏதாவது ஒரு தெய்வ வழிபாடு தினமும் செய்ய வேண்டும்;

ஜாதகம் பார்க்க வருபவர்களிடம் உண்மையே பேச வேண்டும்;தேவைப்படும் போது பாதி உண்மையைச் சொல்லிவிட்டு,அதைப் பின்பற்றுகிறார்களா? என்பதை உறுதி செய்தப் பின்னர் மீதி உண்மையை சில காலம் கடந்த பின்னர் சொல்ல வேண்டும்.இதையெல்லாம் முறையாகப் பின்பற்றினாலே வாக்கு பலிதம் உண்டாகும்.பெயரும் புகழும் வருமானமும் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

நவக்கிரகங்கள் ஜோதிடரின் மனதினுள் புகுந்து ஒவ்வொரு ஜாதகத்திற்கும் பலன்களை எடுத்துச் சொல்கிறது என்பது சூட்சுமமான உண்மை;ஜாதகம் பார்க்க வருபவர்களிடம் கண்டிப்பாக தட்சிணை வாங்க வேண்டும்.இலவசமாக ஒரு போதும்,ஒருமுறை கூட ஜாதக பலன்களைச் சொல்லவே கூடாது.மீறினால்,தட்சிணா தேவி என்ற தேவதையின் சாபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும்;கலையை காசாக்கத் தெரியாதவர்களுக்கு தட்சிணாதேவியின் சாபம் நிச்சயமாக உண்டு;


பிறரின் ஜாதக ரகசியங்களைச் சொல்லி,அவர்களை அவர்களுக்கு வர இருக்கும் ஆபத்துக்கள்,கர்மாக்களிலிருந்து பாதுகாப்பதால் ஜோதிடர் ஒவ்வொருவருக்குமே நவக்கிரகங்களின் சாபம் பீடிக்கும்;அதுவே ஜோதிடர்களுக்கு உடம்பெல்லாம் எரிச்சலை உருவாக்கும்;இதைச் சரி செய்ய அமாவாசை வரும் நாட்களில் பகல் பொழுதில் கடலில் சென்று குளிக்க வேண்டும்; ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாட்களில் இதைச் செய்தே ஆக வேண்டும்;அல்லதுஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் அண்ணாமலைக்குச் சென்று பகலில் அல்லது இரவில் மஞ்சள் பட்டு வேட்டி கட்டிக் கொண்டு,இரு கைகளிலும் தலா ஒரு ஐந்து முக ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டு மனதிற்குள் ஓம் அண்ணாமலையே போற்றி என்றோ அல்லது அருணாச்சலாய நமஹ என்றோ ஜபித்தவாறு எவரிடமும் பேசாமல் இருந்து கிரிவலம் செல்ல வேண்டும்.கிரிவலம் செல்லும் போது மட்டுமே இந்த மஞ்சள் பட்டு வேட்டியையும்,ஐந்து முக ருத்ராட்சத்தையும் பயன்படுத்த வேண்டும்.இதை அறியாத பல ஜோதிடர்கள் தனது இறுதி காலத்தில் பிறரின் கர்ம நோயால் அவதிப்பட்டு இறந்தனர்;திறமையான ஜோதிடர்கள் வாத நோயால் (ஜோதிட கணிதம் போடும் போது மூளை அதிகபட்ச செயல் திறனுடன் செயல்படும்;அது வாதத்தை உருவாக்கும்) இறந்து வருகின்றனர்;

ஜோதிடர்கள் குலதெய்வ வழிபாட்டுடன் கண்டிப்பாக தினமும் பைரவ வழிபாடு செய்வது அவசியம்.காலத்தை இயக்குபவர் ஸ்ரீகால பைரவப் பெருமான் ஆவார்;தனது நீண்டகால ஜோதிட வாடிக்கையாளர்களுக்கு பைரவ வழிபாட்டு முறையை பயிற்றுவிக்க வேண்டும்;அவர்கள் குடும்பத்தார் அனனவருக்கும் ஜீவகாருண்யத்தை புகட்டி(பின்பற்றச் செய்து),பைரவ வழிபாட்டைப் பின்பற்றச் செய்ய வேண்டும்;அவர்களின் வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாட்டைத் துவக்கி வைக்க வேண்டும்;இதற்காக aanmeegajothi.blogspot.in என்ற வலைப்பூவின் பதிவுகளை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுப்பது புண்ணியமே!!இதன் மூலமாக பைரவப் பெருமான்,ஜோதிடர்களின் வாக்குப் பலிதத்தை அதிகரிப்பார்;ஜோதிடர்களின் கர்மவினைகள் தீர சரியான திதி,நட்சத்திரம்,ஓரை வரும் நேரத்தில் கடலில் குளிக்கச் செய்வார்;குளிக்கச் செய்து நமது கர்மவினைகளை கடலில் கரைய வைப்பார் என்பது கடந்த ஐந்து வருட அனுபவம்!!!


 ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment