Wednesday, 3 September 2014

பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவது ஏன்?

பசுவிற்கு அகத்திக்கீரை, பழம் கொடுத்து வழிபட்டால் நம் பாவம் தீரும் என்பது ஐதீகம். இதற்குரிய மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தால் இன்னும் சிறப்பு.ஸர்வ காம துகே தேவி ஸர்வ தீர்த்தாபிசோசினிபாவனே ஸுரபி ஸ்ரேஷ்டேதேவி துப்யம் நமோஸ்துதே!எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்பவளே! எல்லா தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்யப்படுபவளே! மங்கல வடிவானவளே! பெருமைக்குரிய காமதேனுவே! உன்னை வணங்குகிறேன் என்பது இதன் பொருள்.  இதைச் சொல்லி பசுவை வழிபட்டால், முன்னோர் சாபம், குடும்ப சாபம் தீரும். பிதுர் ஆசி பூரணமாக கிடைக்கும். குடும்பத்தில் தடைபட்ட சுபவிஷயங்கள் விரைவில் நடந்தேறும்.

ராகு கால பூஜை ஏன்




ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அதிதேவதை உண்டு. அதன்படி ராகுவிற்கு துர்க்கை அதிதேவதை. ராகுதோஷம், திருமணத்தடை, புத்திரப்பேறின்மை நீங்க காளி, துர்க்கை வழிபாட்டை ராகுகாலத்தில் மேற்கொள்வது நல்லது.

Tuesday, 2 September 2014

விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைபூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப் 
பொன் அரை ஞாணும் பூந்துகி லாடையும் 
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் 
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும் 
அஞ்சு கரமும் அங்குச பாசமும் 
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்


இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும் 
திரண்டமுப்புரி நூல் திகழொளி மார்பும் 
சொற்பதங் கடந்த துரியமெய் ஞான 
அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன 
இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித் 
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி 
மாயாப் பிறவி மயக்க மறுத்தே 
திருந்திய முதலைந் தெழுத்துந் தெளிவாய் 
பொருந்தவே வந்தேன் உளந்தனிற் புகுந்து 


குருவடி வாகிக் குவலயந் தன்னில் 
திருவடி வைத்துத் திறமிது பொருளென 
வாடா வகைதான் மகிழ்தெனக் கருளிக் 
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் 
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி 
ஐம்புலன் றன்னை அடக்கு முபாயம் 
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுக்குங் கருத்தினை யறிவித்து 
இருவினை தன்னை அறுத் திருள் கடிந்து 


தலமொரு நான்குந் தந்தெனக்கருளி 
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே 
ஒன்பது வாயில் ஒருமந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி 
ஆறா தாரத் தங்கிசை நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே 
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் 
கடையிற் சுழுமுனை கபாலமுங் காட்டி 
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் 
நான்றெழ பாம்பின் நாவில் உணர்த்திக் 


குண்டலி யதனிற் கூடிய அசபை 
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து 
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் 
காலால் எழுப்புங் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 
குமுத சகாயன் குணத்தையுங் கூறி 
இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் சக்கரத்தின் உறுப்பையுங் காட்டிச் 
சண்முக தூலமும் சதுர்முகச் சூக்ஷமும் 
எண்முக மாக இனிதெனக் கருளிப் 


புரியட்ட காயம் புலப்பட எனக்குத் 
தெரியட்டு நிலையும் தரிசனப் படுத்தி
கருத்தினிற் கபால வாயில் காட்டி 
இருத்தி முத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித் தெனக்கருள் செய்து 
முன்னை வினையின் முதலைக் களைந்தே 
வாக்கும் மனமும் இல்லா மனோலயம் 
தேக்கியே என்றான் சிந்தை தெளிவித்து 
இருள்வெளி யிரண்டிற் கொன்றிட மென்ன 
அருள் தரும் ஆனந்த மளித்து என்செவியில் 


எல்லை இல்லா ஆனந்தமளித்து 
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் 
சத்தத்தின் னுள்ளே சதாசிவம் காட்டிச் 
சித்தத்தின் னுள்ளே சிவலிங்கங் காட்டிச் 
அணுவிற் கணுவாய் அப்பாலுங் கப்பாலாய்க் 
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் 
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை 
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத் 
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட 
வித்தக விநாயக விரைகழல் சரணே



"கற்பக விநாயகர்" --- பிள்ளையார்பட்டி

தல வரலாறு



குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்தான் பிள்ளையார்பட்டி. சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட கோயில் என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோயில்களை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு உண்டு. பெருபரணன் என்ற மன்னனின் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆக, இந்த ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது இந்தக் குடைவரைக் கோயில்.



பிள்ளையார்பட்டி என்பது இன்றைய வழக்கில் இருக்கும் பெயர்தான். எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், இராச நாராயணபுரம். மேலும், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் என்ற பெயர்களும் உண்டு. கல்வெட்டுக்கள் மூலம் இத் தலத்தின் முற்காலப் பெயர்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்தக் கோயில் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டு நகரத்தார்கள் வசமானது என்பது வரலாறு. நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பான முறையில், ஆகம முறை தவறாமல் வழிபாடு நடைபெறுகிறது. கோயிலையும் சுற்றியுள்ள வயல்வெளிகளையும் நகரத்தார்கள் சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர்.
இத் தலம் காரைக்குடியிலிருந்து 12 வது கிலோமீட்டர் தொலைவில் திருப்பத்தூர் செல்லும் வழியில் குன்றக்குடியை அடுத்து அமைந்திருக்கிறது. திருப்பத்தூரிலிருந்து ஒன்பதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது. கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்சமாக இத் தலத்தில் அமர்ந்திருப்பவர் கற்பக விநாயகர். இத்தலத்தில் அமர்ந்திருக்கும் பிள்ளையாரை மக்கள் கற்பக விநாயகர் என்றே அழைக்கின்றனர். ஆனால், அவருக்கு தேசி விநாயகர் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பெயரும் உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க விநாயகர், அழகுள்ள விநாயகர் என்று பொருள். தேசிகன் என்ற சொல் வணிகர்களைக் குறிப்பிடும் சொல். வணிகர் குலம் தழைக்க அருள் புரியும் விநாயகர், கற்பக விநாயகர்.

"கற்பக விநாயகர்" திரு உருவம் காலத்தால் பழைமை வாய்ந்த வடிவமாகும். வலது கையில் ஒரு சின்ன லிங்கமும் இடது கரத்தைத் தனது தொந்தியைச் சுற்றியுள்ள வயிற்றுக் கச்சையின் மீது வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார். தும்பிக்கை வலமாக சுழித்துக் கொண்டிருக்கும். வலம்புரியாக வளைந்த தும்பிக்கையும் தந்தங்களின் அமைப்பும் அழகாக அமைந்திருக்கிறது. மார்பில் முப்புரி நூல் இல்லாமல், வயிற்றை முப்பட்டையாலான உதரபந்தம் அலங்கரிக்க தலையில் மகுடம் சூடி வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் இடமே பிள்ளையார்பட்டி. விநாயகப் பெருமான் கயமுகாசுரனைக் கொன்று விடுகிறார். இந்த பழி விலக்க சிவபெருமானை நோக்கி தவம் இருக்கிறார் விநாயகப் பெருமான்.சிவபெருமானை வடக்கு நோக்கி அமர்ந்து பூஜித்தற்கான ஐதீகத்தைக் கொண்டது இக்கோயில்.புதிய கணக்கு தொடங்கல், வியாபாரம் ஆரம்பித்தல் போன்ற காரியங்களுக்கு இத்திருக்கோயில் மிக சிறப்பு வாய்ந்தது.

கோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும், மற்றொரு பகுதி கற்றளி எனவும் அமைந்திருக்கிறது. குடைவரைக் கோயிலை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களின் திருப்பணி. கற்றளியை அமைத்த பெருமை நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் பெரும்பணி. தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது இக் குடைவரைக் கோயில். அமைப்பிலும் அழகிலும் தனித்தன்மையுடன் அமைந்திருக்கிறது. மற்ற குடைவரைக் கோயில்களிலிருந்து மாறுபட்ட வடிவமுடையது. பெரும்பாலும் முகப்புத் தூண்களும் அரைத் தூண்களும் இல்லாத குடைவரைக் கோயில்கள் அமைந்ததில்லை, இது ஒன்றைத் தவிர.

விநாயகர் சந்நிதிக்கு எதிர்புறம் அமைந்த வடக்கு கோபுர வாயில் வழியாகச் சென்று வழிபாடு முடித்து கிழக்கு ராஜ கோபுர வாயில் வழியாக வெளியே வரவேண்டும். இதுவே மரபாகக் கொண்டுள்ளனர். வடக்கு கோபுர வாயிலின் வழியாக நுழைந்ததும் இரண்டு பக்கங்களிலும் அழகான மண்டபங்களைக் கொண்டுள்ளது. உள்ளே குடைவரைக் கோயிலைக் குடைந்து அமைக்கப்பட்ட ஆறு அடி உயர கற்பக விநாயகர் அர்த்தச் சித்திரமாகக் காட்சி தருகிறார். அவருக்கு எதிர்புறமாக கொடிமரமும் பலி பீடமும் பெரிய மூஞ்சூறின் உருவமும் அமைக்கப்பட்டிருக்கின்றன. குடைவரைக் கோயிலினுள் நடுவே கிழக்கு முகமாக அமைக்கப்பட்டிருக்கும் மகாலிங்கம் மிகுந்த பொலிவுடன் காணப்படுகிறது. திருவீசர் எனப்படும் இப்பெருமானுக்கு திருவீங்கைக்குடி மகாதேவர் என்ற பெயரும் உண்டு. சற்று வடக்கில் வெளிப்புறச் சுவரில் லிங்கோத்பவர் காட்சியளிக்கிறார்.

இக் குகைக்கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைந்திருக்கிறது மருதீசர் சந்நிதி. கற்றளி எனப்படும் இந்த மருதீசர் சந்நிதி நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் திருப்பணியால் சிறப்பிக்கப்பட்டது. சதுர வடிவ கருவறையின் நடுவே வட்ட வடிவமான ஆவுடையார் மீது லிங்க வடிவில் அமைந்துள்ள மருதீசர் அர்ஜுனவனேசர் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறார். இக் கருவறையைச் சுற்றியுள்ள புறச் சுவர்கள் சிற்பங்கள் எதுவுமின்றி நுட்பமான கட்டட வேலைப்பாடுகளுடன் மிக அழகாகவும் எளிமையாகவும் திகழ்கின்றன. மருதீசர் கோயில் 30 செப்புத் திருமேனிகளைக் கொண்டுள்ளது. காலத்தால் இவை கி.பி. 10-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரையிலானது.

மருதீசர் கோயிலை வலம் வருவதற்காக எழுப்பப்பட்டுள்ள திருச்சுற்றுப் பாதை நல்ல நீள, அகலத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது. திருச்சுற்று மாளிகையின் தூண்களில் வடிக்கப்பட்டிருக்கும் சிற்பங்களையும், மாளிகைப்பத்தியில் இருக்கும் பரிவார தெய்வங்களையும் நேரில்தான் பார்க்க வேண்டும். அவ்வளவு அற்புதமாக அமைக்கப்பட்டிருப்பதைச் சொல்வதற்குத்தான் வார்த்தைகளே இல்லை. மருதீசர் கோயிலின் மேல்சுற்றுப் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருப்பவர் வாடாமலர் மங்கை. இவருடைய சந்நிதி தெற்கு முகமாகக் காட்சியளிக்கிறது. கருவறை நடுவே அம்மனின் திருஉருவம் பத்ம பீடத்தின் மீது இரண்டு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறது. நகரத்தாரின் முதல் திருப்பணியின்போது இச்சந்நிதி அமைக்கப்படு அம்மன் பிரதிட்சை செய்யப்பட்டுள்ளது. காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

வடக்கு கோபுர வாயிலின் உள்ளே கிழக்குப் பகுதியில் சிவகாமியம்மன் சந்நிதி உள்ளது. மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராசர் சபையுள்ளது. அலங்கார மண்டபத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் ஓவியக்கலைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது.

கோயில் திருமதிலின் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிலைகளுடன் அமைந்த இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கல்லாலும் அதற்கு மேற்பட்ட பகுதிகள் செங்கல் மற்றும் சுதை கொண்டு எழுப்பப்பட்டுள்ளது. கற்பக விநாயகர் சந்நிதியின் முன்புறமாக இருக்கும் திருமதிலின் வடக்கு வாயிலில் விநாயகக் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இது மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது. இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கற்களைக் கொண்டும் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள கோபுரத் தளங்கள் செங்கல்லைக் கொண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது. ராஜகோபுரத்தைவிட காலத்தால் பழைமை வாய்ந்தது இக்கோபுரம்.

விநாயகர் கோபுரத்திற்கு எதிரே வெளிப்ப்ரகாரத்தின் வட திசையில் விசாலமாக அமைந்த திருக்குளம் உள்ளது. பிள்ளையார்பட்டியில் ஒவ்வொரு சதுர்த்தியின்போதும் இரவு நேரத்தில் விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார். பிள்ளையார் சதுர்த்திக்கு ஒன்பது நாள்கள் முன்பாக காப்புக் கட்டி, கொடியேற்றம் செய்து திருவிழா தொடங்குகிறது. இரண்டாம் நாளில் இருந்து எட்டாம் நாள் வரை பிள்ளையார் பல்வேறு வாகனங்களில் வலம் வருவார். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். பத்தாம் நாள் காலையில் தீர்த்தவாரி நிகழும்.

பிரார்த்தனை

இத்தலத்தில் வணங்கினால் கல்வி ,கேள்வி, ஞானம், திருமணம், குழந்தை பாக்கியம்,குடும்ப நலம் ,உடல் பலம் உட்பட சகல பலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. புதிய கணக்கு தொடங்கல், வியாபார விருத்தி ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

நேர்த்தி கடன்

  • சதுர்த்தி விரதம் : முக்குறுணி மோதகம்(கொழுக்கட்டை) செய்து வழிபடல்.
  • கணபதி ஹோமம் :தொழில் அபிவிருத்தி வேண்டுவோர் இத்தலத்தில் கணபதி ஹோமம் செய்வது மிகவும் விசேஷம்.அருகம்புல் மாலை அணிவித்து வழிபடல்.

முக்கிய திருவிழாக்கள்

  • சதுர்த்தி திருவிழா ஆவணி மாதம் 10 நாட்கள். ஒன்பது நாட்கள் முன்பாக காப்புக்கட்டி கொடிஏற்றம் செய்து திருநாள் தொடங்கும்.சதுர்த்தி அன்று இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளுவது விசேசம்.மிக விமரிசையாக நடக்கும் இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்
  • திருக்கார்த்திகை
  • மார்கழி திருவாதிரை நாளன்று சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் திருவீதி பவனி வருவார்.
இவை தவிர தமிழ்,ஆங்கில புத்தாண்டு தினங்கள் , தீபாவளி ,பொங்கல் போன்ற விசேசநாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.அதுமட்டுமில்லாமல் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து போகும் கோயில் இது.

 சிறப்பு:
விநாயகரிடம் நவகிரகங்களின் எந்த செயல்பாடும் செல்லாது.எனவேதான் பிள்ளையார்பட்டி கோயிலில் நவகிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன.இங்கு வேண்டிக்கொண்டால் நவகிரகங்களின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

அருள்பாலிக்கும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர்

பூவுலக வாசிகளின் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மா. ஆனால் அவருக்கு மண்ணுலகில் ஒரு சில கோயில்கள் மட்டுமே இருக்கின்றன.

அதேசமயம் அநேகமாக எல்லா சிவாலயத்திலும் நான்முகனுக்கு ஒரு சன்னதி இருக்கும் என்றாலும் அங்கே அவருக்கு வழிபாடு நடப்பது அபூர்வம். இந்தியாவிலேயே பிரமாண்டமான பிரம்மா தமிழ்நாட்டில்தான் இருக்கிறார் என்பதும் வியப்புக்குரிய செய்திதானே!
திருச்சிக்கு அருகே உள்ள திருப்பட்டூர் என்ற தலத்தில்தான் பெரிய உருவத்துடன் பிரம்மா அருள்புரிகிறார்.
திருப்பிடவூர் என அழைக்கப்பட்டு தற்போது திருப்பட்டூர் என்று அழைக்கப்படும் ஊரில் உள்ளது, பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர்; இறைவி, பிரம்மநாயகி.
ஆலயம் இந்து ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது.
உள்ளே நுழைந்தால் வேத மண்டபம், நாத மண்டபம், ஆகியவை கடந்ததும் வரும் அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள அருவறையில் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். மண்டூகநாதர், கைலாசநாதர் என்பன இறைவனின் பிற பெயர்கள்.
அன்னை பிரம்ம நாயகிக்கு, பராசக்தி, பிரம்ம சம்பத் கௌரி என்ற பெயர்களும் உண்டு.
பல்லவர் காலம் தொடங்கி நாயக்கர் காலம் வரை பல மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட ஆலயம் இது.
ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 15, 16, 17 தேதிகளில் காலையில் சுமார் 6.30 மணிக்கு சூரிய பகவான் தன் பொற்கதிர்களால் தழுவி பிரம்மபுரீஸ்வரருக்கு ஆராதனை செய்யும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும்.
உட்பிராகாரத்தில் மூலவருக்கு வடபுறத்தில் தனிச் சன்னதியில் ஆறடி உயரத்தில் தியான நிலையில் தாமரை மீது பத்மாசனக் கோலத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார் பிரம்மா.
இந்தியாவிலேயே மிகப் பிரமாண்டமான பிரம்மா இவர்தான்.
வட இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு அருகில் புஷ்கர் என்ற இடத்திலும்; தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் தருவையாறு அருகில் திருகண்டியூரிலும், திருச்சியை அடுத்த உத்தமர் கோயிலிலும்; கரூர் மாவட்டம் கொடுமுடியிலும், திருநெல்வேலி அருகில் பிரம்ம தேசத்திலும், இத்தலத்திலுமாக இந்தியா முழுக்க ஆறு இடங்களில் மட்டுமே பிரம்மாவுக்கு கோயில் அல்லது தனிச்சன்னதிகள் உள்ளது.
இங்கே திருப்பட்டூரில் ஆறு அடி உயரம் ஆறு அடி சுற்றளவில் முன்பக்கம் மூன்று முகங்களும் பின்புறம் ஒரு முகமும் ஆக நான்கு முகங்களுடன் காட்சியளிக்கும் பிரம்மதேவன், தனது வலது கையில் ருத்ராட்ச மாலையையும், இடது கையில் கமண்டலத்தையும் ஏந்திக் காட்சி தரும் அழகைக் காணும் பக்தர்கள் மெய்சிலிர்த்து தம்மை மறப்பது நிஜமே!
திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பிரம்மன் சன்னதியில் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும். பக்தர்கள் தாங்களே அரைத்துத் தரும் மஞ்சள் காப்பில் மங்களகரமாக காட்சி தருகிறார் பிரம்மா.
குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. குருவின் அதிதேவதையான பிரம்மாவின் பார்வை பட்டால் பக்தர்களுக்கு கோடானு கோடி நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


இங்கு அருள்பாலிக்கும் நான்முகனுக்கு தனிக்கதை ஒன்று உண்டு.
படைக்கும் கடவுளான பிரம்மனுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தன.
ஈசனை போல தனக்கும் ஐந்து தலை இருப்பதை எண்ணி அகங்காரம் கொண்டார் பிரம்மா. அழிக்கும் ஈசனைவிட படைக்கும் தனக்கே சக்தி அதிகம் என்று இறுமாப்பு கொண்டார். தன்னைவிட உயர்ந்தவர் யாருமில்லை என்றெண்ணிய பிரம்மா, யாரையும் மதிக்காமல் கர்வம் கொண்டு அலைந்தார்.
அதனைக் கண்ட சிவபெருமான், பிரம்மாவின் அகந்தையை அடக்க எண்ணினார். அவருக்கு சரியான பாடம் புகட்ட முடிவு செய்தார். ஐந்து தலைகள் இருப்பதால்தானே அகம்பாவம் தலை தூக்குகிறது என்று நினைத்த சிவபெருமான், பிரம்மாவின் ஒரு தலையை கொய்துவிட்டார். அதுமட்டுமின்றி அவரிடமிருந்து படைக்கும் ஆற்றலையும் பறித்தார். படைப்பாற்றலை இழந்த பிரம்மா தன் தவறை உணர்ந்தார்.
மன்னிக்கும்படி வேண்டி பல தலங்களில் ஈசனை பூஜித்தார். அந்தத் தலங்களில் பிரம்மாவால் பூஜிக்கப்பட்ட சிவ வடிவங்கள் பிரம்மபுரீஸ்வரர் என்ற நாமகரணத்துடன் அழைக்கப்படுகின்றன.
பிரம்மா இந்தத் திருப்பட்டூரில் துவாதச லிங்கத்தை (12 லிங்கங்கள்) பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தியுள்ளார்.
பிரம்மனின் வழிபாட்டைக் கண்டு மனம் இளகிய சிவபெருமான், படைப்பாற்றலை மீண்டும் அவருக்கு வழங்கினார்.
அதுமட்டுமல்ல, "உன்னை வழிபடுவோர்க்கு விதியிருப்பின் நன்மையைக் கூட்டி அருள்க!' என்ற வரத்தையையும் சிவ பெருமான் பிரம்மாவுக்கு அருளினார்.
திருப்பட்டூரில் உள்ள பிரம்மாவை தரிசிக்கும் விதி யாருக்கு உள்ளதோ அவர்களுடைய விதியை மாற்றவும்; அதனால் அவர்களுக்கு கூடுதல் நற்பலன்கள் கிட்டவும் அருள்புரியும் வரத்தை ஈசனிடம் பெற்றதால் இவரை வழிபடுவோர் வாழ்வு சிறக்கும் என்பது நிச்சியம்.
பிரம்மனுக்கு வரம் அளித்த இத்தலத்து இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார். பிரம்மனுக்கு தேஜஸை வழங்கியதால், அன்னை பிரம்ம சம்பத் கௌரி என அழைக்கபடலானாள்.
பதஞ்சலி சித்தர் வாழ்ந்திருந்த தலம் இது. இவர் இந்தத் தலத்தில் லிங்க உருவில் பிரம்மாவின் அருகில் உள்ளார்.
வடக்குப் பிராகாரத்தில் சண்டிகேசுவரர் சன்னதி அருகே பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி உள்ளது. சித்தர்கள் வாழ்ந்த தலங்களில் மட்டுமே பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி இருக்கும் என்பது வழக்கத்தில் காணப்படும் ஒன்று.
உட்பிராகாரத்தில் கற்பக வினாயகர், பழமலைநாதர், கந்தபுரீசுவரர், கஜலட்சுமி, நடராஜர் சபை, கால பைரவர், சூரியன் சன்னதிகள் உள்ளன.
தேவக்கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் திருமேனிகள் உள்ளன.
அம்மன் சன்னதிக்கு அருகே தாயுமானவர் சன்னதி, பிரம்ம தீர்த்தம், பகுள தீர்த்தம் உள்ளன.
அம்மன் சன்னதியை அடுத்துளள வெளிவட்டத்தில் சப்தரிஷீசுவரர், காளத்திநாதர், ஐம்புகேசுவரர், அருணாசலேசுவரர், ஏகாம்பரேசுவரர், மண்டூகயநாதர் ஆகியோரது சன்னதிகள் தனித்தனியே உள்ளன.
ஆலயத்தின் தல விருட்சம் மகிழ மரம்.
இந்த ஆலயத்தில் உள்ள நாத மண்டபத்தின் கல்தூண்களைத் தட்டினால் மனதை வருடும் மெல்லியநாதம் எழுந்து நம்மை சிலிர்க்க வைக்கும்.
இங்கு அருள்பாலிக்கும் பிரம்மன் தன்னை தரிசித்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் தலையெழுத்தை நல்ல விதமாக மாற்றி எழுதி அவர்களது நல்வாழ்க்கைக்கு வழிகோலுவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
திருச்சி - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர் என்ற இத்தலம்.

" ஸ்ரீ அகஸ்தியாய நம"

நமது கஷ்டங்களுக்குத் தீர்வு கிடைக்காதா என்று ஏங்குபவர்களுக்கு, மிகப் பெரும் அருமருந்தாக இருப்பது இறைவனின் நாம ஜெபம். இதே மாதிரி லிகித ஜெபம் என்று ஒன்றும் இருக்கிறது. பேப்பரில், பழைய டைரியில் , நோட்டுப் புத்தகங்களில் இறை நாமத்தை எழுதுவார்களே அதைத் தான் லிகித ஜெபம் என்று கூறுகிறார்கள். எனக்குத் தெரிந்த சில பிராமண குடும்பங்களில் வயதான அனைவரும், ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தை இதற்கெனவே ஒதுக்கி இடைவிடாமல் எழுதுகிறார்கள். இதனால் கிடைக்கும் சக்தி அபரிமிதமானது. அப்படி எழுதும் குடும்பங்கள் அனைத்திலும், பரிபூரண குடும்ப அமைதி நிலவுகிறது. அந்த குடும்ப வாரிசுகள் அனைவரும், இன்று நல்ல வேலையில், மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். காலம் கெட்டுக் கிடக்கும் சூழலில், ஒரு மனிதன் தவறான பாதைக்கு செல்ல நிமிஷ நேரம் போதும். அவ்வாறு செல்ல விடாமல் , இறையருள் தடுத்தாட்கொள்ள - இந்த லிகித ஜெபம் நிச்சயம் உதவும். 

மேலும், மனம் ஒன்றி எழுத எழுத - இறை சிந்தனை மேலோங்கும். நம்மை அறியாமலே , நாம் அந்த இறைவனின் நேரடிப் பார்வைக்கு உட்படுகிறோம்.
என்னுடைய சின்ன வயதில், என்னுடைய தகுதிக்கு கிடைக்கவேண்டிய சில அரிய வாய்ப்புக்களை ஸ்ரீ ராம ஜெயம் எழுதி சாதித்தேன். நடக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்த விஷயங்கள் கூட, ஒரு அதிசயம் போல நடந்த சம்பவங்களும் உண்டு. அப்படி மகத்தான வல்லமை இந்த லிகித ஜெபத்திற்கு உண்டு.

அந்த காலத்தில் ஆலயங்களுக்கு மூலவரை ஸ்தாபிக்கும்போது, எந்திரத் தகடுகளில் சில மந்திரங்களை எழுதி, அந்த மூலவருக்கு உரிய மூல மந்திரங்களை எழுதி ஸ்தாபனம் செய்வார்கள். விண்ணில் நிறைந்து இருக்கும் சக்தியை கும்பம் மூலம் ஆகர்ஷித்து , அதை உள் வாங்கி, தீப வழிபாட்டின்போது அதை வழிபடுபவர்களுக்கு கிடைக்க செய்வதில், இந்த மந்திரங்களுக்கு பெரும் பங்கு உண்டு.

இதைப் போன்ற மிக அரிதான வாய்ப்பு, ஒன்று நம்மைத் தேடி வந்து இருக்கிறது. விரைவில் ஸ்தாபனம் செய்யப்பட விருக்கும், மகான் ஒருவரின் சித்த ஜீவ சமாதிக்கு - சித்தர்களின் தலையாய சித்தரான , ஸ்ரீ மஹா குரு அகஸ்தியரின் லிகித நாம ஜெபம் தேவைப் படுகிறது.

நீங்கள் எழுத வேண்டிய மந்திரம் " ஸ்ரீ அகஸ்தியாய நம"

அகஸ்தியரின் அருளைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. நாம் யார், நமது முந்தைய பிறவிகளின் பாவ புண்ணியங்கள் , நாம் இந்த பிறவியில் எந்த நிலையில் இருக்கிறோம் , என்ன செய்ய விருக்கிறோம், அடுத்த பிறவியில் நம் நிலை என்ன என்பதை , முற்றும் அறிந்த மகா ஞானி அகஸ்தியப் பெருமான். அகஸ்திய தரிசனம் ஒன்று போதும். ஒரு கணப் பொழுதில் நம் கர்மங்கள் அனைத்தும் தொலைந்து போகும். நம் வாழ்வில் சிகரம் தொடும் அளவுக்கு சாதனைகள் செய்ய இயலும். நம்பி இந்த காரியத்தில் ஈடுபடுங்கள்.
நோட்டுப் புத்தகத்தில், அல்லது வெள்ளைப் பேப்பர்களில், " ஸ்ரீ அகஸ்தியாய நம"  என்று நீலம் அல்லது பச்சை மையினால் , தங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு எழுதி - கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் அக்டோபர் முதல் வாரத்திற்குள் வந்தடையுமாறு, எழுதி அனுப்புங்கள். ஒவ்வொரு முறை எழுதத் தொடங்கும்போதும், உங்கள் குல தெய்வத்தை ஒரு முறை வேண்டிக்கொண்டு , பின்பு மனதிற்குள் உங்கள் நிறைவேற வேண்டிய கோரிக்கை (களை) மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்டு, உலக ஷேமத்திற்காகவும் வேண்டி  எழுதுங்கள்.

குளித்து முடித்து, சுத்தமான உடை அணிந்து, வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி - குல தெய்வத்தை ஒருமுறை மனதில் வேண்டி - ஓம் ------------------ போற்றி! என்று வேண்டிக்கொண்டு - அர்ச்சனைக்கு சொல்வோமே அப்படி, குலம் / கோத்திரம் , பெயர், நட்சத்திரம் சொல்லிவிட்டு - உங்கள் அவசியமான கோரிக்கைகளை வேண்டிக்கொண்டு - கடன் தொல்லை தீர, வீடு கட்ட, கார் வாங்க, திருமணம் நிறைவேற, குழந்தை பாக்கியம் கிடைக்க, நிம்மதியான வாழ்வு கிடைக்க, குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்கு, உடல் நலம் வேண்டி இப்படி உங்களை வருத்திக்கொண்டு இருக்கும் கோரிக்கைகளை மனதிற்குள் வேண்டி, அகஸ்திய பெருமானை நல் வழி காட்டுமாறு பிரார்த்தனை செய்துகொண்டு எழுதத் தொடங்குங்கள்...!

அதன் பிறகு நடக்கும் அற்புதத்தை பாருங்கள்..! எழுதத் தொடங்கிய சில நாட்களிலேயே அந்த அதிசயம் கண்டிப்பாக நிகழும்.

அந்த அகஸ்திய மகரிஷியே திருவுளம் கொண்டு , இந்த அரும்பெரும் வாய்ப்பை நல்கியதாகவே நான் கருதுகிறேன். உங்களுக்கும் இதே போன்ற எண்ணம் தோன்றுமேயானால், அவசியம் நீங்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரமோ அல்லது பொருள் விரையமோ என்று நினைக்க வேண்டாம். உங்கள் சந்ததிக்கே நீங்கள் சேர்க்கும் சொத்து இது என்று நம்பி செயல் பட்டு, அகஸ்திய மகரிஷியின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.

இந்த தகவலை தகுதி வாய்ந்த உங்கள் உறவினர் / நட்பு வட்டத்திற்கும் தெரியப்படுத்துங்கள். Facebook / Twitter என்று உங்களால் முடிந்தவரைக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். யார் யாருக்கெல்லாம் ப்ராப்தம் இருக்கிறதோ, அவர்கள் அனைவருக்கும் இந்த தகவல் பயன் தரட்டும்.

இந்த அரும்பெரும் பணியில் ஈடுபட்டு இருக்கும், சகோதரர் முரளிக்கு வாழ்த்துக்களும்,  இந்த வாய்ப்பை நமக்குத் தந்ததற்காக நன்றிகளும்..!
கீழே இது சம்பந்தப்பட்ட அறிக்கையை இணைத்துள்ளேன். படத்தில், ரைட் க்ளிக் செய்து, வியூ இமேஜ் க்ளிக் செய்யுங்கள். அதன் பிறகு, கர்சரை படத்தில் க்ளிக் செய்ய படம் பெரிதாகத் தெரியும்.

வாழ்க அறமுடன்! வளர்க அருளுடன்!


சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க.....



சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஓரு சித்தர் எளிய பரிகாரம் ஒன்றை சொல்லியுள்ளார்.அந்த பரிகாரம் வருமாறு: பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு விநாகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும்.
அப்போது கையில் உள்ள அரிசியை போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கி செல்லும். அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்ய வேண்டும்.
பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்துக்காக சேமித்து வைத்து கொள்ளூம். இரண்டரை  ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும். இதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும்.
அப்போது பரிகாரம் வலுவிழந்து விடும். எனவே நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம். இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்
ஒருவருக்கு சனி திசை வந்து விட்டால் கூடவே சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடுவார். யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அஷ்டமத்து சனி நேரடி சண்டையை உருவாக்காது. நம்மை சேர்ந்த உறவினர்கள் மூலம் பிரச்சினைகளை உருவாக்கி விடும். இதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் வருமாறு....
தேவை இல்லாமல் சந்தேகப்படக் கூடாது. உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும். சுவையான உணவுகளை தவிர்க்க வேண்டும். சகிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும். எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். சனிக்கிழமைகளில் எள் எண்ணை ஏற்ற வேண்டும். மன நலம் குன்றியவர்களுக்கு உதவ வேண்டும்.
பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது. சனி தசை நடக்கும் போது எந்த செயல் செய்தாலும் தாமதமாகும். அதற்காக கோபப்படக் கூடாது. பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். இப்படி நம்மை மாற்றிக் கொண்டால் சனி பாதிப்பில் இருந்து சற்று தப்பிக்கலாம். 

* தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
* சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்
* கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
* வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.
* சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
* சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
* விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
* அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.
* ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
* தேய்விறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
* அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.
* கோமாதா பூஜை செய்யலாம்.
* ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.
* சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.
* அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.
* சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.
* உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.
* வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.
* பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை  கொடுத்து வணங்க வேண்டும்.
* தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். 

லக்னத்தில் சனி அமர்ந்து உடலில் அபரிமிதமாக ரோமங்கள் காணப்பட்டால் பணம் இல்லாமை, பணமுடை ஏற்படும். அதற்கு
* பரிகாரம்,சாதுக்கள் மற்றும் தானம் கேட்போருக்கு ஒரு இரும்பு ஸ்டவ் இனாமாக கொடுக்கலாம்.
* சனி இரண்டில் இருந்தால்- நெற்றியில் எள் எண்ணெய் தேய்த்தல் கூடாது.
* சனி மூன்றில் இருந்தால்-வீட்டு வாசல் கதவில் மூன்று இரும்பு ஆணி இருக்கச் செய்யவும்.
* சனி நான்கில் இருந்தால்- கறுப்பு ஆடைகள், கொள்ளு( தானியம்) தானம் செய்யலாம்.
* சனி ஐந்தில் இருந்தால்- வீட்டின் மேற்கு பாகத்தில், செம்பு, வெள்ளி, தங்க உலோகம் இருக்கச் செய்யவும்.
* சனி 6-ல் இருந்தால் 40-க்கும் மேல் 48 வாதிற்குள்ள  இடைகாலத்தில்  வீடுகட்டுதல் கூடாது.
* சனி7-ல் இருந்தால்- கருப்பு நிற பசுவுக்கு புல் தரலாம். மூங்கில் குழாயில் சர்க்கரையை நிரப்பி வீட்டு வாசலில் பூமியினுள் மூடி வைப்பதுவும் போதுமானது.
* சனி 8-ல் இருந்தால்- கல்லில் அல்லது மரப்பலகை நாற்காலியில் அமர்ந்து, தண்ணீரில் ஒரு  ஸ்பூன் பாலை கலந்து குளித்தல் சிறப்பானது.
* சனி 9-ல் இருந்தால்-வீட்டின் மொட்டை மாடியில் புல் வளர்த்தல் கூடாது.
* சனி 10-ல் இருந்தால்-10-பார்வையில்லாதோருக்கு தானம் செய்யலாம்.
* சனி11-ல் இருந்தால்- வீட்டை நீண்ட நாள் பூட்டி செல்லும் போது வீட்டு வாசலில், சிறு குடம் தண்ணீரை வைத்து செல்வது தீமையை அகற்றும்.
* சனி 12-ல் இருந்தால்-வீட்டின் கடைசி இருட்டறையில் 12-ம் பாதாம் பருப்பை கறுப்பு துணியில் முடித்து வைப்பது நன்மையூட்டும்.
சனியை முறையோடு வணங்கினால் தொல்லைகளை அகற்றிவிடுவார். 

ஏழரைச் சனி நீங்கும் போது அந்த ராசிக்காரர்கள் அன்றைய தினம் புண்ணிய நதிகள், சமுத்திரம், நீர்த்தடாகங்கள், குளம் போன்றவற்றில் நீராட வேண்டும். இயலாதவர்கள் வீட்டில் உள்ள கிணற்றில் குளிக்கலாம். சமுத்திர ஸ்நானம் செய்யாதவர்கள் நல்லெண்ணை தலையில் வைத்து குளிப்பது சிறப்பு.
குலதெய்வ வழிபாடு செய்த பின்பு சிவதரிசனம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் நவக்கிரக சூக்தம் ஜெபம் செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். பசுவிற்கு அகத்திக்கீரை உண்ணத் தருவது மிகவும் சிறப்பு.
சனி பகவான் நீதிமான். குற்றங்கள் புரிபவர்களையும் தெரிந்தே பாவங்கள் செய்பவர்களையும் அகந்தையுடனும், அகங்காரத்துடனும் நடப்பவர்களையும் அவர் தண்டிக்காமல் விடமாட்டார். சில சமயங்களில் ஒரு பாவமும் அறியாத நல்லவர்கள் கஷ்டப்படும் பொழுது, சனி என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டான் என்று புலம்புவது உண்டு.
அது போன ஜென்மத்து பாவங்களின் தொடர்ச்சியாகும். ஆகவே எப்பொழுதும் நன்மைகள் செய்ய சனியின் தாக்கம் குறையும் என்று அருளாளர்கள் கூறுவர். சனீஸ்வரர் எப்பொழுதும் கண்களைக் கட்டிக் கொண்டு தான் இருப்பார், அவரது நேரடிப்பார்வையின் உக்கிரத்தை யாராலும் தாங்க முடியாது என்பதால் தான் அவர் இப்படி கருப்புத் துணியால் கண்களைக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம்.
ஏழரை நாட்டுச் சனி, அஷ்டமச் சனி, ஜன்மச் சனி, ஜாதகத்தில் சனி திசை நடக்கும் போது நல்லதும், கெட்டதும் நடக்க வாய்ப்பு உண்டு. சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் அவரின் தாக்கம் குறைய ஒவ்வொரு சனிக்கிழமையும் காகத்திற்கு சாதத்தில் எள் கலந்து உணவு வைக்க வேண்டும்.
உளுந்து வடையை காகங்களுக்குப் போடுவது நல்லது. ஒவ்வொரு சனி அன்றும் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை இரவு படுக்கும் போது கொஞ்சம் எள்ளை ஈரத் துணியில் கட்டி தலைக்கு அடியிலோ, உடலுக்கு அடியிலோ, வைத்து விடிந்த பின் சாப்பிடுவதற்கு முன் அந்த எள்ளை சாதத்துடன் கலந்து காகத்திற்கு வைக்க வேண்டும். ச
னி பகவான் கால் ஊனமுற்றவர், ஆதலால், உடல் ஊனமுற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும், ஏழைகளுக்கும் முடிந்த உதவிகள் செய்யலாம். தயிர் அன்னம் அளிப்பது மிகவும் நல்லது. விநாயகப் பெருமானை வணங்கி அவருக்கு நல்லெண்ணெயில் தீபம் இடுதல் நல்ல பலனைக் கொடுக்கும். சனிக்கிழமை வரும் பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு சனியின் உக்கிரத்தைக் குறைக்கும். கரிநாளில் பைரவரை சிவப்பு மலர்களால் அர்ச்சித்தால் சனியின் தாக்கம் குறையும்.
வாதம் நீக்குபவர்........
இந்த சனி பிடித்தவன் சந்தைக்கு போனாலும், கந்தலும் அகப்படாது....
இந்த சனியின் பிறந்த நாளிலிருந்து குடும்பத்தை பாடாய்படுத்துகிறது. இப்படியாக சனியை பல கோணங்களில் வசை பாடினாலும் அவரின் மகத்துவம் சிறப்பானது. சனி ஒருவர் மட்டுமே பிற கிரகங்களை விட உலகத்து மக்களிடம் பிரபலமானவர்.
குரு கிரகத்திற்கு அடுத்த கிரகம் சனி, குறுக்களவு உத்தேசமாக 73,000 மைல். குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணு மாலையா கோவிலில் கற்சிலையாக தூணில் பெண் உருவில் காட்சி தருகிறார். நெல்லையை அடுத்த கருங்குளத்திலும் சனி பகவான் நீலாவுடன் அமர்ந்துள்ளார். மனித உடலில் தொடைகளுக்கு உடையவர்.
குடல் வாத நோய் இவரால் ஏற்படும். மேலும் முதுகு வலி,  முடக்கு வாதம், யானைக் கால், பேய் தொல்லை, மூலநோய், மன தளர்ச்சி இவையும் இவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்நோய் பாதித்தவர்கள் சனியை வணங்குவதால் நோயின் வேகம் வெகுவாக தணியும்