Thursday, 15 June 2017

சந்திர யோகம்’- கிரகங்களின் சேர்க்கை

சந்திரனுடன் மற்றொரு கிரகம் சேர்ந்திருந்தால் ஏற்படக்கூடிய பலன்கள் குறித்துப் பார்ப்போம்.
சந்திரன்- சூரியன்: சந்திரனுடன் சூரியன் சேர்ந்திருப்பது பித்ரு தோஷத்தைக் குறிப்பதாகும். அயல் தேசங்களுக்குப் போய் பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். எவ்வளவுதான் சம்பாதித்தாலும், செலவு செய்வதற்கு மிகவும் யோசிப்பார்கள். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் இருக்கும். அலட்சிய மனப்பான்மையுடன் நடந்துகொள்ளும் இவர்கள், பெற்றோரிடம் அதிக பாசம் செலுத்த மாட்டார்கள். இவர்கள் துவர்ப்புச் சுவை கொண்ட உணவுகளை விரும்பி உண்பர்.
சந்திரன்- செவ்வாய்: சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்திருப்பது, சந்திர மங்கள யோகம் எனப்படும். இவர்கள் மிகுந்த தைரியசாலிகளாக இருப்பர். பூமி, வாகனம் வாங்கி விற்பதன் மூலமும், மருத்துவம், மருத்துவ உபகரணங்கள் மூலமும் பணம் சம்பாதிப்பர். கடல்சார்ந்த பொருட்களாலும் இவர்களுக்கு லாபம் கிடைக்கும். பெரும்பாலும் இவருக்குச் சகோதரிகள் இருக்க மாட்டார்கள். இவர்கள் கசப்புச் சுவை கொண்ட உணவுகளை விரும்பிப் புசிப்பர்.
சந்திரன்- புதன்: சிறந்த அறிவாளிகள். ஜோதிடம், வானியல் ஆராய்ச்சி, கணக்கு தணிக்கைத் துறை, கல்வித் துறை போன்றவற்றில் இவர்களுடைய ஜீவனம் அமையும். சிலர் ஆன்மிகம் தொடர்பான துறைகளில் உயர்பொறுப்பு வகிப்பர். இவர்களுக்கு பெரும்பாலும் தாய்மாமன் உறவுமுறையிலேயே திருமணம் நடக்கும். தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டு. இவர்களுக்குப் பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கக்கூடும்.
சந்திரன்- குரு: சந்திரனுடன் குரு சேர்ந்திருப்பது, குரு சந்திர யோகம் ஆகும். பொன், நவரத்தினங்கள் போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். ஆன்மிகத்தில் புகழுடன் திகழ்வர். இவரைச் சுற்றி இருப்பவர்கள் இவர்களுக்கு உதவிகரமாகவே இருப்பர். இவர்களுக்குப் பெரும்பாலும் ஆண் குழந்தைகளே பிறக்கும். கோயில் கட்டுதல்,  பொதுநலப் பணிகள் போன்றவற்றில் ஆர்வத்துடன் ஈடுபடுவர்.
சந்திரன்- சுக்ரன்: பாட்டு, நடனம், ஓவியம், நடிப்பு போன்ற கலைகளில் தேர்ச்சியும் ரசனையும் பெற்றிருப்பர். தான் இருக்கும் இடத்தைச் சுத்தமாகவும் கலைநயத்துடனும் வைத்திருப்பர். தெய்விக ஈடுபாடு அதிகம் இருக்கும். அம்மனை வழிபடும் இவர்களுக்கு வாக்குப் பலிதம் உண்டு. பங்களா, சொகுசு கார் என்று வசதியாக வாழ்வர். குழந்தை பாக்கியம் இல்லையென்றே சொல்லலாம். ஒருசிலருக்கு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் வாய்ப்பு உண்டு. இனிப்பு இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
சந்திரன்- சனி: உழைப்பாளிகள். இரும்பு சம்பந்தமான பொருட்களின் மூலம் பணம் சம்பாதிப்பர். எத்தனை வசதிகள் இருந்தாலும் அனுபவிக்க முடியாதபடி சுற்றிக்கொண்டே இருப்பர். குடும்ப நலனுக்காகவே எப்போதும் பாடுபடுவர். அதிக காரமான உணவு வகைகளையே விரும்பிச் சாப்பிடுவர்.
சந்திரன்- ராகு: இந்த ஜாதகர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மாமனார், மாமியார் வகையில் தொல்லைகள் தொடர்ந்து ஏற்படும். கணவன்- மனைவிக்குள் அவ்வப்போது பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கும். இவர்களால் எந்த வேலையிலும் நிரந்தரமாக இருக்க முடியாது. அடிக்கடி பணி மாறிக்கொண்டே இருப்பர். தலைவலி, வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் ஏற்படும். உடன்பிறப்பு வகையிலும் பிரச்னைகள்தான். ஜாதகத்தில் சந்திரன்- ராகு சேர்க்கை பெற்றவர்கள், உரிய பரிகாரங்களைச் செய்துகொள்வதன் மூலமே பிரச்னைகளில் இருந்து விடுபடமுடியும்.
சந்திரன்- கேது: இவர்கள் அறிவுத் திறன் கொண்டவர்களாக இருந்தாலும், அதைச் சரியானபடி பயன்படுத்த மாட்டார்கள். இவர்களைப் புரிந்துகொள்வது கடினம். யாரிடமும் அதிகம் பேசமாட்டார்கள். இவர்களுக்கு வாக்குப் பலிதம் உண்டு. ஏதேனும் பொருள் காணாமல் போனால், அதுபற்றிய விவரங்களைச் சொல்லக்கூடிய ஆற்றல் இவர்களுக்கு உண்டு. இவர்களுக்கு எல்லாவிதமான மந்திரங்களும் ஸித்தியாகும்.

No comments:

Post a Comment