Thursday 15 June 2017

சுகங்களைத் தரும் சுக்ரன்… கிரகங்களின் சேர்க்கை

சுக்ரன் – சூரியன்:
இந்தச் சேர்க்கை நல்ல இடத்தில் அமைந்திருந்தாலோ அல்லது இந்தச் சேர்க்கை உள்ள இடத்துக்கு குருவின் பார்வை அல்லது சேர்க்கை ஏற்்பட்டிருந்தாலோ அசுப பலன்கள் நீங்கி, பெரிய மனிதர்களின் தொடர்பையும், செல்வச் செழிப்பான வாழ்க்கையையும் பெற்றிருப்பார்கள்.
மற்றபடி, இந்தச் சேர்க்கை அவ்வளவாக சிலாக்கியம் இல்லை. இந்தச் சேர்க்கை கொண்ட ஜாதகர்கள், கலகம் செய்வதில் ஈடுபடுவர். தகாத குணமும் நடத்தையும் கொண்டவர்கள். பெண்களாக இருந்தால், கணவன் வீட்டாரின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்வர். பிறரை ஏமாற்றுவதில் சாமர்த்தியசாலிகள். ஒருவர் செய்த நன்மைகளை உடனுக்குடன் மறந்துவிடுவர்.
சுக்ரன் – சந்திரன்:


இந்த சேர்க்கையை பெற்றவர்கள், நிறைந்த கல்வி அறிவும், புத்தி சாதுரியமும் கொண்டவர்கள். சகல சுக செளகரியங்களையும் பெற்றிருப்பார்கள். பிறருக்கு உதவி செய்யத் தயங்கமாட்டார்கள். மூர்க்கத்தனம், பிடிவாத குணம் போன்றவற்றைத் தவிர்த்துக்கொள்வது அவசியம். இவர்களின் சிறிய வயதிலேயே தாயைப் பிரிய நேரிடும். இந்தச் சேர்க்கை அமையப் பெற்ற ஜாதகர்கள் பெண்களிடம் பேசுவதற்கு சங்கோஜப்படுவார்கள்.
சுக்ரன் – செவ்வாய்:
அழகான தோற்றமும் ஆரோக்கியமான உடலமைப்பும் பெற்றிருக்கும் இவர்கள், சத்தமாகப் பேசுபவர்கள். மிகுந்த தைரியசாலிகள். எதையும் சாமர்த்தியமாகத் திட்டமிட்டுச் செய்து, வெற்றி பெறக் கூடியவர்கள். எப்படியாவது தங்கள் காரியம் நிறைவேறினால் போதும் என்று நினைக்கக்கூடியவர்கள். கலைகளில் பிரியம் உள்ள இவர்கள் பொறுமைசாலிகளும்கூட! என்னதான் செல்வந்தர்களாக இருந்தாலும்கூட, இரக்க குணமோ, தர்ம சிந்தனையோ, உதவும் மனப்பான்மையோ இவர்களிடம் இருக்கும் என்று சொல்ல முடியாது.

சுக்ரன் – புதன்:
அன்பும் பாசமும் நிறைந்த இவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். எப்போதும் நேர்மையுடன் நடந்துகொள்வார்கள். எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டு, வெற்றிவாகை சூடுவார்கள். நல்ல பேச்சாளர்கள். சிந்தித்துச் செயலாற்றும் திறன் கொண்ட இவர்களால் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாது. கலகலப்பாக எல்லோரிடமும் பேசிப் பழகக்கூடியவர்கள். இவர்களுக்கு இயல்பிலேயே நகைச்சுவை உணர்வு அதிகம் இருக்கும். வாழ்க்கையில் எல்லாவிதமான சுகபோகங்களையும் அனுபவித்து வாழ்வார்கள்.
சுக்ரன் – குரு:
இவர்கள் எந்த ஒரு கருத்தையும் ஆதரித்தும் மறுத்தும் பேசக்கூடிய திறமை கொண்டவர்கள். இரக்க மனம் கொண்ட இவர்களுக்குப் பிடிவாத குணமும் சேர்ந்தே இருக்கும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பார்கள். பிறரை எளிதில் நம்பிவிட மாட்டார்கள். குறைவான உழைப்பில் நிறையச் செல்வம் பெற நினைப்பவர்கள். சொத்துக்களைச் சேர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பார்கள். ஆசைகள் அதிகம் இருக்கும். காரியம் ஆக வேண்டுமானால் எதையும் செய்யக் கூடியவர்கள். எப்பொழுதும் எதிலும் போராடிக்கொண்டே இருப்பதான வாழ்க்கையே அமையும்.
சுக்ரன் – சனி:
கம்பீரத்தோற்றத்துடன் காணப்படும் இவர்களுக்கு நல்லது எது, கெட்டது எது என்று பகுத்துப் பார்க்கத் தெரியாது. வீட்டில் மீனாட்சியின் ஆட்சிதான்! திடசித்தம் கொண்ட  இவர்களுக்கு இருக்கக்கூடிய முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. அதேபோல், சஞ்சல குணத்தையும் விட்டுவிட வேண்டும். நீதி நேர்மையைக் கடைப்பிடிப்பதுடன், உண்மையா னவர்களாகவும் நடந்துகொள்வார்கள் இவர்கள். 
சுக்ரன் – ராகு:
மனைவியிடம் அதிக அன்பும் பாசமும் கொண்டிருப்பார்கள். எண்ணிய காரியங்களை எண்ணியபடியே முடிப்பதில் வல்லவர்கள். மக்கள் நலப் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் ஈடுபடுவார்கள். வீடு, நிலங்கள், மாடு கன்றுகள், செல்வம், செல்வாக்கு அனைத்தும் பெற்றிருப்பார்கள். எந்த வேலையாக இருந்தாலும், அதில் ஊக்கத்துடன் ஈடுபடுவார்கள். மற்றவர்களால் புகழத்தக்க அளவுக்கு இவருடைய செயல்பாடுகள் அமைந்திருக்கும். இந்தச் சேர்க்கை சரியான இடத்தில் அமையப் பெறாத ஜாதகர்கள் எப்பொழுதும் கவலை தோய்ந்த முகத்துடனும் நோயாளியாகவும் காணப்படுவார்கள்.
சுக்ரன் – கேது:
ஆன்மிகத்தில் ஈடுபாடும், திருக்கோயில்களைத் தரிசிப்பதில் விருப்பமும் கொண்டிருக்கும் இவர்கள் பூஜை வழிபாடுகளைச் சிரத்தையுடன் செய்வார்கள். எந்த ஒரு காரியம் என்றாலும், அதுபற்றித் தீவிரமாக யோசித்த பிறகே ஈடுபடுவார்கள். நீதிநேர்மையுடன் இன்னும் பல நல்ல குணங்களையும் கொண்டிருக்கும் இவர்கள் அழகான ஆடை ஆபரணங்களை அணிய விரும்புவார்கள். கவிஞர்களாகவும் ஆசிரியர்களாகவும் புகழுடன் திகழ்வார்கள். இவர்களில் சிலர் ஜோதிடத்திலும், மந்திர தந்திரங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். இவர்களுக்குப் பெரும்பாலும் பித்தம் சம்பந்தமான நோய்களே ஏற்படும். எக்காரணத்தைக் கொண்டும் சொன்ன சொல்லை மீறமாட்டார்கள். 

No comments:

Post a Comment