Monday, 26 June 2017

தீய சக்தியை அணுகா வண்ணம் தடுக்கும் சில வழிமுறைகள்

1 .ஓடும் தண்ணீரை தீய சக்தியால் தாண்ட முடியாது,
2 .நம் சிறுநீரகத்தால் போட்ட கோட்டை நம்மை தாக்க வரும் தீயசக்தி தாண்ட முடியாது.
3 . கமண்டலத்தில் உறுஏற்றி வைத்துள்ள மந்திர தண்ணீரை சிறிது வலது கை உள்ளங்கையில் ஊற்றி நமக்கு சித்தியான மந்திரத்தை மனதிற்குள் மனம் ஒன்றி கூறி நம் முன் தெளித்தால் தீயசக்தி விலகிவிடும்.
4 . அக்னி வளர்த்து நம் தேவதையை நினைவுகூர்ந்தாலும் தீயசக்தி விலகி ஓடிவிடும்.
5 .இருபக்கமும் மூச்சு காற்றை நன்கு இழுத்து வேகமாக வெளியேற்றினால் தீயசக்தி ஓடிவிடும்,
6 .வலது காலை அழுத்தமாக பூமியில் உதைத்தாலும் தீயசக்தி விலகிவிடும்.
7 .வலதுகால் இடதுகால் பெருவிரலை பூமியில் அழுத்தி நின்றாலும் தீயசக்தி விலகிவிடும்.
8 . வலதுகை மணிகட்டில் ஒரு கயிரினை இருக்க மந்திரம் ஓதி கட்டினாலும் தீயசக்தி விலகிவிடும்.
9 .பாதிக்கப்பட்டவர் முகத்தில் மந்திரம் ஓதிய நீரை தெளித்தாலும்,
10 .வேப்பிலை இலையை கையில் வைத்திருந்தாலும்,
11 .மயில் இறகை கையில் வைத்திருந்தாலும்,
12 .எதாவது ஒரு உலோகத்தை கையில் வைத்திருந்தாலும்ம தீயசக்தி அணுகாது. தீயது இருந்தாலும் விலகிவிடும்.
13 .எலுமிச்சை கனியை கையில் வைத்திருந்தாலும் அல்லது தலையில் வைத்து சிறிதுநேரம் பொருத்து அதை காலால் நசுக்கி வீசிவிட்டு காலை கழுவிக்கொண்டாலும் தீயசக்தி விலகிவிடும்.
14 .உப்பு தண்ணீரில் நின்றாலும், மஞ்சள் கலந்த தண்ணீரில் நின்றாலும் தீயசக்தி விலகிவிடும், அண்டாது.
15 .துளசி செடி இருக்கும் அருகில் தீயசக்தி அறவே வராது. (அதனால் தான் காட்டில் குடில் அமைத்து வாழ்ந்த தவசிகள் துளசி செடியை வளர்த்து வழிபட்டனர்.)
16 .ஐவகை எண்ணெய் சேர்த்து எரியவிடும் தீபத்தின் அருகில் தீயசக்தி விலகிவிடும்.
17 .நாய் உடன் இருந்தாலும் தீயசக்தி அண்டாது.
18 .பசுவின் சாணம் பட்ட இடத்திலும் தீயசக்தி அண்டாது, பசுவின் ஜலம் பட்ட இடத்திலும் தீயசக்தி விலகிவிடும்.
19 .நமக்கு மிக நம்பிக்கையான தெய்வத்தை நினைத்து செப்பு தகட்டில் ஒரு சூலம் வரைந்து உடலில் எங்காவது தாயத்து இட்டு அணிந்து கொண்டாலும் தீயசக்தி அண்டாது விலகிவிடும்,
20 .பௌர்ணமி இரவு முழுக்க தூங்காமல் இருந்து அரசமரத்தை வலம் வந்தால் விரும்பியதை அடையலாம். தீயசக்தியும் விலகிவிடும்.
21 .அமாவாசை இரவில் அகண்ட தீபம் ஏற்றி அதன் அருகில் தூங்காமல் தீபத்தையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாலும் விருப்பம் நிறைவேற வழிபிறக்கும் தீயசக்தியும் விலகிவிடும்.
22 .மிருதங்கம், உடுக்கை, சங்கு போன்ற இசையை உற்று நோக்கினாலும் தீயசக்தி அண்டாது விலக வழிகிடைக்கும்.
23 .இடதுகால் மணிக்கட்டில் கருப்பு கயிறில் மந்திரம் ஓதி மூன்று முடிச்சிட்டு கட்டிக்கொண்டாலும் தீயசக்தி விலகிவிடும் .
24 .கல்யாண பூசணியோ அல்லது எலுமிச்சை கனியையோ கத்தியால் சரிபாதியாக வெட்டி குங்குமம் தடவி அமரும் இருபக்கமும் வைத்தாலும் அல்லது வீட்டின் தலைவாயிற்படி இருபக்கமும் வைத்தாலும் தீயசக்தி விலகிவிடும்.
25 .நம் கையால் பெரிய அளவு உள்ள தேங்காயை நன்கு சிதறும்படி உடைத்தாலும் தீய சக்தி விலகிவிடும்.
26 .நெய், வெண்ணெய், பால் உணவு சாப்பிட்டு அது செரிக்கும் வரை தீய சக்தி அண்டாது. நெய்தீபம் எரியும் இடத்திலும் தீயசக்தி விலகி நிற்கும்.
27 .சுத்த சந்தனம் நெற்றியில் வைத்துக்கொண்டாலும் தீயசக்தி அண்டாது விலகிவிடும்.
28 .வாசியை உயர்த்தும் பயிற்சி கொண்டவர்களுக்கும், வெளி இடங்களில் தூங்காதவருக்கும், நெற்றிக்கண்ணை கூர்ந்து கவனிப்பவருக்கும், மந்திரம் செபிப்பவருக்கும், சித்தனை அறிவு உள்ளவருக்கும் தீயசக்தி அண்டாது.

நண்பர்களே இங்கொரு விஷயத்தை கவனத்தில் வைக்கவும். திருஷ்டி மற்றும் திட்டமிட்டு செய்யும் சூன்யம் வைப்பு போன்றவை எவரையும் தாக்கிவிடும். தீய எண்ணத்தாக்கம் கொண்ட உணவை உண்டாலும் உணவு விஷமாகிவிடும். அதனால்தான் விரோதி வீட்டில் கை நனைக்காதே என்பார்கள். எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் தகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். மந்திர உபாசனை செய்பவராகட்டும் சாமான்யராகட்டும் வெளியில் செல்லும்போது காலணி அணிந்து செல்லுங்கள். கால்அடிகளை பதிப்பதனால் அது ஆலயத்தின் உள்ளே மற்றும் விருட்சத்தின் அடியில் இருக்கலாம். கண்ட இடங்களில் கால் அடியை பதித்தால் அதன்மூலம் மண்ணெடுத்து சூன்யம் செய்ய மற்றவருக்கு வாய்ப்புள்ளது.

தலைமுடியை கண்ட இடங்களில் போடவேண்டாம். முடிவெட்டும்போது முடி விழத்தான் செய்யும். ஆனால் அங்கு வேறொருவரின் முடியுடன் நம் முடி கலந்துவிட்டால் சூன்யம் வேளை செய்யாது. உங்கள் அழுக்கு துணியை பத்திரமாக வைத்து துவைத்து விடவும். விரோதி கையில் சிக்கும்படி வைக்காதீர்கள். உங்கள் அழுக்கு துணி மற்றவர் வியர்வையில்பட்டால் கூட நீங்கள் வசியமாகிவிடுவீர்கள் கவனம். வெளியில் சாப்பிடாதீர்கள். வாராவாரம் திருஷ்டி சுற்றிப் போட்டுக்கொள்ளுங்கள், தெய்வ பிராத்தனையை எப்பொழுதும் கைவிடாதீர்கள். இவைகளையெல்லாம் கடைபிடித்தும் மேற்படி உங்களிடம் தீயசக்தி உள்ளதாக உணர்ந்தால் மந்திர சித்தியான மாந்திரீகரிடம் சென்று நிவாரணம் பெறலாம்.

உடற்கட்டு மந்திரம் போட்டுக்கொண்டவரை எந்த தீயசக்தியும், திருஷ்டியும், வைப்பும் அணுகாது. உணவு மூலம் விஷயம் ஏறினால்தான் உண்டு. எனவே உடற்கட்டு காபந்து உள்ளவராயினும், உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள். சூரியசக்தியை உடலில் பெருக்கிக் கொள்கிறவர்களுக்கு திருஷ்டி சூன்யம் அண்டாது. யார் தொடுத்தாரோ அவரையே திருப்பி தாக்கிவிடும். அதனால்தான் சூரியன் அம்சமான சிம்மராசி லக்கணம் மற்றும் சூரிய நட்சத்திரக்காரர்களை எவர் ஒருவர் திருஷ்டி சூன்யம் வைப்பு செய்தாலும் வைத்தவரையே திருப்பி தாக்கிவிடும் என்பர் இது முற்றிலும் உண்மையே.

பிரம்ம ரிஷிகளான துர்வாசர், விசுவாமித்திரர், வசிஸ்டர் போன்ற ரிஷிகளின் ஆசியால் அரிய சக்தி கொண்டவர்களை தாக்குபவர்கள் அவர்களையே பன்மடங்கு தாக்கிக் கொண்டதற்கு சமமான கெடுபலன் விளையும் என ஆசி வழங்கியுள்ளதால் சூரியசக்திக்கு எதிர்சக்தி இல்லாமல் போனது. (சூரிய சக்திகாரர்கள் தன் வினையில் மட்டுமே தன்னை அழித்துக்கொள்ள முடியும்.) எனவே நண்பர்களே சூரிய வழிபாட்டின் மூலம்(சூரிய நமஸ்காரம்) சூரியசக்தியை பெருக்கிக் கொள்ளுங்கள்.

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடியுங்கள். எல்லாம் நலமாய் அமையும். தீயசக்திகளை பிறருக்கு விரட்ட செப்பு தகட்டில் கோரப்பல் தெய்வங்களின் மந்திரத்தை மனதால் தியானித்து ஒரு முக்கோணம் கீறி முக்கோண மூன்று முனைகளிலும் சூலம் கீறி முக்கோண மத்தியில் தெய்வத்தை நினைத்து ஓம் என்று எழுதி அதை தாயத்தில் அடைத்து பாதிக்கப்பட்டவரை கட்டிக்கொள்ள சொன்னாலே போதும் தீயசக்தி விலகிவிடும்.

சிவனடியான்

Saturday, 24 June 2017

ராகு - கேதுக்கு எப்போது பரிகாரம் செய்ய வேண்டும்?

 ராகு - கேது என்பவை நிழல் கிரகங்கள் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகின்றன. நிழல் கிரகங்களாக இருந்தாலும் மிகவும் வலிமை வாய்ந்தவை ஆகும். பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் ராகு - கேது எந்த கிரகங்களுடன் சேர்ந்து இருக்கிறதோ, அந்த கிரகத்தின் அடிப்படை குணத்தை பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை. ராகுவும், கேதுவும் நல்ல கிரகங்களுடன் சேர்ந்தால், நல்ல பலனும், தீய கிரகங்களுடன் சேர்ந்தால் தீய பலனும் அளிக்கும் குணமுடையவை ஆகும்.
🍀 ஒருவரது ஜாதகத்தில் ராகு - கேது தோஷம் இருந்தால் திருமணம் தாமதமாகும். தொழிலில் திடீர் முடக்கம் ஏற்படும். தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் தொந்தரவு தரும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் தள்ளிப்போகும். ராகு - கேது தோஷத்தை பரிகாரம் மூலம் நிவர்த்தி செய்ய ராகு - கேதுவிற்கு எப்போது பரிகாரம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
------------------------
ராகு - கேதுக்கு எப்போது பரிகாரம் செய்ய வேண்டும்?
🌹 செவ்வாய் திசையில் ராகு புத்தி, கேது அந்தரம் நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.
🌹 ராகு திசையில் ராகு புத்தி, கேது புத்தி நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.
🌹 சந்திரதிசையில் ராகு புத்தி, ராகு அந்தரம் கேது புத்தி, கேது அந்தரம் நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.
🌹 குரு திசையில், கேது புத்தி ராகு புத்தி நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.
🌹 சூரிய திசையில், எந்த புத்தி நடந்து கொண்டிருந்தாலும், அதில் ராகு அல்லது கேது அந்தரம் நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.
🌹 சனி திசையில் ராகு, கேது புத்தி-சூரிய புத்தியில் ராகு, கேது அந்தரம் நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.
🌹 கேது திசையில் சந்திர புத்தி, சூரிய புத்தி, புதன் புத்தியில் ராகு-கேது அந்தரம் நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.
🌹 புதன் திசையில் சந்திர - புத்தி, ராகு - கேது அந்தரம் நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.
🌹 சுக்கிர திசையில் குருபத்தி-கேது ராகு அந்தரம் நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.
🌹 மேலும் ராகு ஆங்கில எண்.4 - க்கு அதிபதியாவார் 4,13,22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ராகு ஆதிக்கம் உடையவர்கள் ஆவர்.
🌹 ராகு ஒவ்வொரு நாளிலும் வலிமைபெறும் காலம் 1.30 மணி ஆகும். இக்காலத்தில் சுபகாரியம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

நவகிரக கோளாறுகளை நீக்க எளிய குளியல் பரிகாரங்கள்:

❉ ஜாதகத்தில் தற்சமயம் நடக்கும் திசை, கிரகம், நமக்கு அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் எது என அறிந்து அதற்கேற்ப, தீய பலன்களை தரக்கூடிய கிரகங்களுக்கு உரிய பரிகாரங்கள் செய்வதன் மூலம் நற்பலன்களை பெறலாம்.
❉ தீய பலன் தரக்கூடிய கிரகங்களிடம் நற்பலன் பெறுவதற்கு நாம் குளிக்கும் போது அந்த கிரகங்களுக்குரிய பொருட்களை நீரில் கலந்து குளித்தால் நற்பலன்களை பெறலாம்.
-----------------
சூரியன் :
❉ கசகசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம். சிறிதளவு போதும். இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம்.
--------------
சந்திரன் :
❉ தயிரை முதலில் உடல் முழுவதும் தேய்த்து விட்டு சிறிது ஊறி பின்பு குளிக்கவும்.
--------------
செவ்வாய் :
❉ வில்வ கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளித்து வரலாம். செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், மற்றும் திருமணத்தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரம்.
------------
புதன் :
❉ மஞ்சள் கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர் சிறிது சேர்க்கப்பட்ட நீரில் குளித்து வரலாம்.
--------------
வியாழன் :
❉ கருப்பு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
-------------
சுக்கிரன் :
❉ பச்சை ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
--------------
சனி :
❉ கருப்பு எள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
--------------
ராகு :
❉ மகிஷாக்ஷி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
-----------------
கேது :
❉ அருகம்புல் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

Monday, 19 June 2017

எட்டு வடிவ நடைப்பயிற்சி

எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை.


No automatic alt text available.

தினமும் 15 முதல் 30 நிமிடம் வரை ஒன்று (அ) இருவேளை செய்தால் போதுமானது.காலை நேரத்திலோ அல்லது நேரம் கிடைக்கும் போதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவெளியிலோ, கிழக்கு மேற்காக கோடு வரைந்து அதேபோல் 10 அடி விட்டு கோடுகளை வரைந்து அதற்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யவேண்டும்.

(இருசக்கர மோட்டார் வாகனம் பழகுவோர் செய்தல் போன்று).
இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும்.
15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம்.
பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.

பயன்கள் :

இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம்.
70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்..சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும்.

குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி மலச்சிக்கல் தீரும்.
முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாட்யின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது.

செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது.
உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.

காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும்.
அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தப் குறைக்கப்படுகிறது.
இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.

முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.

நண்பர்களும் பயிற்சி செய்து ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்.
இயற்கை உணவின் அதிசயம் ஆரோக்கிய வாழ்வின் ரகசியம்.

மூச்சுக்காற்றே மூலதனம்


காலையில் முழித்த முகம் சரியில்லை! எடுத்த காரியம் எதுவும் நடக்கவில்லை! என்று அலுத்துக் கொள்வோர்களும், இன்றைக்குக் கழுதை முகத்தில் முழித்திருப்பான் போலிருக்கிறது! அதிர்ஷ்டக்காரன், அவனுக்கு அடித்தது, யோகம் என்று வியந்து போவோரும் இருக்கின்றார்கள்.
ஆனால், காலையில் தூங்கி எழும்போதே அன்றைய தினம் எப்படி இருக்கும்! எப்படி இருந்தால் தனக்கு நன்மை உண்டாகும் என்பதை அறிந்து செயல்படுபவர்கள் குறைவு. நாம் நமது மூக்கின் வழியாக விடுகின்ற மூச்சுக்காற்று நம்மை ஆக்குகின்றது. நம்மை ஆள்கின்றது. நம்மை வழி நடத்துகின்றது.
நம்மைப் பற்றியும் நம் உடம்பைப் பற்றியும் முன்னறிவிப்பு செய்யும் மணியாக மூக்கையும் மூச்சையும் குறிப்பிடலாம்.
படுக்கையிலிருந்து எழ வேண்டிய நேரம் அதிகாலை 4.00 மணி. 4.00 மணி என்பது மிகவும் முக்கியமான நேரமாகும். அதிகாலை 4.00 மணிக்கு எந்த நாசிப்பக்கமாக மூச்சு வெளிவருகிறது என்பதைக் கவனித்தால், அன்றைய பொழுதில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
மூக்கிலிருந்து வெளிவருகின்ற மூச்சு முறையாக இல்லாமல் தாறுமாறாக இருக்குமேயானால், மதங்கொண்ட யானையைப் போல் தாறுமாறாக நடந்து இன்பங்களை இழந்து துன்பங்களைச் சம்பாதித்துக் கொள்ளவேண்டியிருக்கும். ஒவ்வொரு நாளும் நாம் விடுகின்ற மூச்சு, மூக்கின் இரண்டு நாசிகளில் ஒரு பக்க நாசியில் வெளி வர வேண்டும்.
மூக்கில் விடுகின்ற மூச்சுக்காற்று முறையாக வெளிவர முதலில் இடது பக்கத்து நாசி வழியாக உள்ளுக்கு இழுத்து வலது பக்க நாசி வழியாக வெளியிட வேண்டும். அடுத்து, வலது பக்க நாசி வழியாக உள்ளுக்கு இழுத்து இடது பக்கத்து நாசி வழியாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு, காலையிலும் மாலையிலும் 21 முறை செய்து பழக வேண்டும். அவ்வாறு செய்தால், மூக்கிலும் மூச்சுக் குழாயிலும் நுரையீரலிலும் உள்ள அடைப்புகளும், சளியும் வெளியேறிவிடும். அதன் பின் மூச்சுவிடுவது இயல்பாக இருக்கும்.
அடுத்ததாக, அதிகாலையில் விழித்தெழுந்து மூக்கில் எந்த நாசி வழியாக மூச்சுக்காற்று வெளியே வருகிறது என்று பார்க்க வேண்டும்.
அதிகாலையில் எந்தப்பக்கத்து நாசி வழியாக மூச்சுக் காற்று வெளிவருகிறது என்பதைக் கொண்டு, அன்றைய தினம் நமது உடம்பு எவ்வாறு இருக்கும் என்பதை முன்னரே அறிந்து கொள்ளலாம்.
வலது நாசி என்பது சூரிய கலை.
இடது நாசி என்பது சந்திர கலை.
ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கு அன்றைய பொழுதின் உடல் நலம் தொடங்குகிறது. அன்றைய பொழுதின் உடல் நடத்தை அதிகாலையிலேயே கண்டறிந்து கொண்டு, அதற்கு வேண்டிய மாற்ற நடவடிக்கைகளைச் செய்து கொண்டால், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல, அதிகாலையிலேயே முடிந்துவிடும்.
எப்படியென்றால், வார நாள்களில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய இம்மூன்று நாள்களில் அதிகாலை நான்கு மணியிலிருந்து காலை ஆறு மணி வரை இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.
ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய இம்மூன்று நாள்களில் வலது பக்க நாசி வாயாக மூச்சு வெளிவர வேண்டும்.
வார நாள்கள் எனில் வியாழக்கிழமை மிகவும் முக்கியமான நாளாகும். மற்ற ஆறு நாள்களைப்போல வியாழக்கிழமையில் மூச்சு விட முடியாது.
வியாழக்கிழமை அன்று பௌர்ணமியாக இருந்தால், அதிகாலை நான்கு மணிக்கு இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.
வியாழக்கிழமை அன்று அமாவாசையாக இருந்தால் இடது நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.
இவை இரண்டும் இல்லாமல் வளர்பிறையாக இருந்தால் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.
தேய்பிறையாக இருந்தால் வலது பக்க நாசி வாயாக மூச்சு வெளிவர வேண்டும்.
மேலே கூறியது கூறியவாறு மூச்சு வெளிவந்து கொண்டிருந்தால் அந்த ஏழு நாள்களும் உடல் நலமும் மன நலமும் சீறாக இருக்கும். எவ்விதமான நோய்நொடிகளும் அண்டாமல் இருக்கும்.
அதற்கு மாறாக, நடந்தால் என்ன நடக்கும்.
ஞாயிறு அன்று காலையில் வலது பக்க நாசியில் மூச்சு வெளிவராமல் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், தலைவலி, சளி, இருமல், ஈளை, மூச்சடைப்பு நோய்கள் உருவாகும்.
திங்கள் அன்று காலையில் இடது பக்க நாசியில் மூச்சு வெளிவராமல் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவந்தால், ஜலதோசம், ஆஸ்துமா, தும்மல் நோய்கள் உண்டாகும்.
செவ்வாய் அன்று காலையில் வலது பக்க நாசியில் மூச்சு வெளிவராமல் இடது பக்க நாசி வழியாக மூசு வெளிவந்தால், காய்ச்சல், கண் எரிச்சல், நெஞ்செரிச்சல், பித்த மயக்கம் ஆகியவை ஏற்படும்.
புதன் அன்று காலையில் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவராமல் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், உடல் வலி, கைகால் குடைச்சல், மூட்டுவலி, நீரேற்றம், தலைக்குத்தல் போன்ற நோய்கள் உருவாகும்.
வியாழக்கிழமை நாளில் பௌர்ணமி, அமாவாசை, வளர்பிறை, தேய்பிறை ஆகியவை இருந்தால், முறையே இடது நாசி, வலது நாசி, இடது நாசி, வலது நாசி ஆகிய நாசி வழியாக மூச்சு வெளிவரவேண்டும். அதற்கு மாறாக வெளிவந்தால், அடி வயிற்றில் நோயுண்டாகும். பெண்களுக்குக் கருப்பைக் கோளாறு ஏற்படும். மலட்டுத் தன்மை உருவாகும். இல்லற உறவு கசந்து போகும்.
வெள்ளி அன்று காலையில் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவராமல் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், கண் வலி வரும். கண் நோய் உண்டாகும். பார்வை குறையும்.
சனி அன்று காலையில் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவராமல் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், குளிர் கரம், சரும நோய், குட்டம் போன்ற நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு.
மூக்கின் வழியாக வருகின்ற மூச்சுக்காற்று தடம் மாறி நடந்தால் உடல்நலம் மட்டுந்தான் பாதிக்கும் என்றில்லை. மன நலமும் பாதிக்கும். மன நலத்தில் ஏற்படுகின்ற பாதிப்பினால், உற்றார் உறவினர்களுடன் பழகும் பழக்கங்களும் பாதிக்கும். அதனால், உறவு முறிவுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
வார நாள்களில் விடுகின்ற மூச்சுக்காற்று தடம்மாறினால் உடல் நலத்தில் குறைபாடுகளும் நோய்களும் உருவாகி, அவற்றின் ஆதிக்கத்தினால் உடல் நலம் பாதிக்கும். உறவும் தொழிலும் உடன்படாமல் எதிர்மறையாகச் செயல்படும். கசப்பும் இழப்பும் வாழக்கையைத் தடம் புரளச் செய்துவிடும்.
இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரணமானது மூச்சுக்காற்று. அது, நாள்தோறும் விடியற்காலையில் எவ்வாறு இயங்குகிறது என்பதைக் கொண்டு அன்றைய பொழுதின் ஆரோக்கியத்தை, மன வளத்தை அறிந்து கொள்ளலாம்.
மூச்சுக்காற்று எந்த நாசியில் இயங்குகிறது என்பதைக் கண்டறிந்து அன்றைய பொழுது எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்வது மட்டும் உடல் நலத்தைப் பேணுவது ஆகாது.
தீங்கும் தீமையும் வரப்போகிறது என்றறிந்து கொண்டு வருவது வரட்டும்! ஒரு கை பார்த்துக் கொள்ளலாம்! என்றிருப்பது அறிவுடமையுமாகாது. எந்தச் செயலுக்கும் ஒரு மாற்று இருப்பதைப் போல, எல்லாவற்றுக்கும் தீர்வு என்பது இருக்கும் என்பதை உணர்ந்து அந்தத் தீர்வு என்ன என்று அறிய முற்பட வேண்டும்.
மூச்சுக்காற்று அதன் இயல்புக்கு மாறாக நடக்கத்தொடங்கும் போதே அதனை மாற்றுவதற்கான தீர்வைச் செய்து முறையாக இயங்கச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தீங்கும் தீமையும் நீர்த்துப் போகும்.
கிழமைக்கு ஏற்றவாறு நாசியின் வலப்புறமோ அல்லது இடப்புறமோ இயங்குகின்ற மூச்சானது, சுமார் ஒரு மணி நேரம் வரை இயங்கிவிட்டு அடுத்த நாசிக்கு மாறிவிடும்.
அதிகாலை நான்கு மணி என்பது அன்றையப் பொழுதின் தொடக்க நேரம் என்று முன்னரே சொன்னோம். அந்த நேரத்தைக்குறிப்பிடவே 'வைகறை துயில் எழு’ என்று கூறப்பட்டுள்ளது.
சூரியகலை சூரியனின் ஆதிக்கத்தில் இயங்குகிறது. இது வெப்பமானது. சந்திரகலை சந்திரனின் ஆதிக்கத்தில் இயங்குகிறது. இது குளிர்ச்சியானது. குளிர்ச்சியும் வெப்பமும் உடலுக்குத் தேவை என்பதால் அவை இரண்டும் மாறி மாறி இயங்கி உலைப் பாதுகாக்கின்றன.
வெப்பம் மிகுந்தாலும் நோயாகும். குளிர்ச்சி மிகுந்தாலும் நோயாகும். அவை இரண்டும் சம அளவில் இயங்கிக் கொண்டிருந்தால், அல்லது இயங்கச் செய்து கொண்டிருந்தால் நோய் என்னும் பேச்சுக்கே இடமில்லை.
அதிகாலையில் எழுந்திருந்த காலைக்கடன்களை முடித்து விட்டு, முகத்தைச் சுத்தம் செய்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், நாசிக்குக் கீழே கையை வைத்து எந்த நாசியின் வழியாக மூச்சுக்காற்று வந்து போகிறது என்பதைச் சோதிக்க வேண்டும்.
அதன் பிறகு, அன்றைய கிழமை என்ன, அக்கிழமையன்று எந்த நாசியின் வழியாக மூச்சு இயங்க வேண்டும் என்றறிந்து ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை அன்றைக்கு வலப்புற நாசி வழியாக மூச்சுக்காற்று இயங்க வேண்டும். அன்றைக்கு அதிகாலையில் வலப்புறத்தில் இயங்கினால் தோஷமில்லை. மாறாக இடப்புறமாக இயங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்ய வேண்டும்?
போர்வை, சமுக்காளம் போன்ற துணியைத் தரையில் விரித்துக் கொண்டு, அதன் மீது பத்ம ஆசனம் போட்டு அமர்ந்து கொள்ள வேண்டும். பத்மாசனம் போட முடியாவிட்டால் சுகாசனம் போட்டு அமர்ந்து கொள்ளலாம்.
சுகாசனம் என்பது சாப்பிடும்போது உட்காருவதுபோல் உட்கார்வது. அவ்வாறு உட்கார்ந்து கொண்டு வலது கையின் கட்டை விரல் மோதிர விரல் ஆகிய இரண்ட மட்டும் நீட்டிக் கொண்டு மற்ற மூன்று விரல்களையும் உட்புறமாக மடக்கிக் கொண்டு, கட்டை விரலை வலப்புற நாசியிலும் மோதிர விரலை இடப்புற நாசியிலும் மூக்கைச் சிந்தும்போது வைப்பது போல் வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது, கட்டை விரலால் வலப்புற நாசியை அமுக்கி மூச்சு வராமல் அடைத்துக் கொண்டு இடப்புறத்து நாசி வழியாக மூச்சை மெதுவாக உள்ளுக்குள் இழுக்க வேண்டும். அவ்வாறு இழுக்கும் நேரம் அரை நிமிடம் என்று வைத்துக் கொள்வோம்.
மூச்சை இழுத்தவுடன் மோதிர விரலால் இடப்புறத்து நாசியை அடைத்துக் கொண்டு, கட்டை விரலை எடுத்து விட்டு, வலப்புற நாசி வழியாகக் காற்றை வெளியே விட வேண்டும். மூச்சை வெளியே விடும்போது, இடப்புறமாக மூச்சை இழுக்கும்போது ஆகும் நேரம் அரை நிமிடத்தைப் போல இரண்டு மடங்கு நேரம் (ஒரு நிமிடம்) மூச்சை மெதுவாக வெளியே விட வேண்டும்.
அடுத்து, வலப்புற நாசி வழியாக மூச்சை வெளியே விட்டதும், அந்த நாசியின் வழியாகவே மூச்சை அரை நிமிட நேரம் அளவுக்கு உள்ளே இழுக்க வேண்டும்.
காற்று உள்ளே சென்ற வலப்புற நாசியைக் கட்டை விரலால் அடைத்துக் கொண்டு, இடப்புறத்தை அடைத்துக் கொண்டிருக்கும் மோதிர விரலைத் தளர்த்திக் கொண்டு ஒரு நிமிட நேரம் அளவுக்கு உள்ளே சென்ற காற்றை மெதுவாக வெளியே விட வேண்டும்.
இவ்வாறு, வலப்புறமும் இடப்புறமும் மாறி மாறி விட வேண்டும். வலது புறத்திலும் இடது புறத்திலும் மூச்சு விடுவது ஒன்று எனக் கணக்கிட்டு, இருபத்தொரு முறை விட வேண்டும்.
அவ்வாறு செய்த பின்பு, சிறிது நேர ஓய்வுக்குப் பின்பு நாசியைச் சோதிக்க வேண்டும். அப்போது, இயல்பாக வரவேண்டிய வலது புறத்து நாசி வழியாக மூச்சு வர வேண்டும்- அப்போதும் இடது புறத்து வழியாகவே மூச்சு வந்து கொண்டிருந்தால், கவலைப்படவேண்டாம்.
விரித்து வைத்துள்ள துணியின் மீது, தெற்கில் தலையை வைத்துப் படுத்துக் கொள்ளலாம். இடது கையை மடக்கி தலைக்கு வைத்துக் கொள்ளலாம். உள்ளங்களையில் காதைவைத்து படுத்துக் கொள்ளவும். இடது காலை மடக்கி வலது காலை நீட்டிக் கொள்ளவும். வலது கை வலது தொடையில் இருக்குமாறு நீட்டிக் கொண்டு, பத்துப் பதினைந்து நிமிடங்கள் படுத்திருந்தால், மூச்சு இடது கலையிலிருந்து மாறி வலதுக்கு வந்துவிடும்.
மேலும் மற்றொரு முறை சுவர் ஓரமாக நின்று கொண்டு இடது காலைத் தூக்கி வலது கால் தொடை மீது வைத்துக் கொள்ளவும். கை இரண்டையும் ஒன்றாகச்¢சேர்த்து கும்பிடுவதுபோல வைத்துக் கொண்டு, கையைத் தலைக்கு மேலே நீட்டிக் கொள்ளவும். இதற்கு நின்ற பாத ஆசனம் என்று பெயர். இந்த ஆசனத்தில் ஐந்து நிமிடம் நின்றால் மூச்சு இடகலையிலிருந்து வலதுக்கு மாறிவிடும்.
இவ்வாறு கலையை மாற்றிக்கொண்டால், அன்றைய பொழுது ஆனந்தமாக இருக்கும்.
கால் மேல் கால்:
ஒரு சிலர் எந்த இடத்தில் அமர்ந்தாலும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.
பெரியவர்கள் முன்னிலையில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு அமரக் கூடாது! அது மரியாதைக் குறைவு என்றெல்லாம் கூறப்பட்டாலும், யார் எதைச் சொன்னாலும் நான் அப்படித்தான் உட்காருவேன் என்று, உட்காருவோரும் இருக்கின்றார்கள்.
வலது காலின் பெரு விரலிலிருந்து சூரிய கலையும், இடது காலின் பெருவிரலில் இருந்து சந்திர கலையும் தொடங்குகிறது என்பதால், வலது காலைச் சூரியனாகவும் இடது காலைச் சந்திரனாகவும் கருதலாம்.
உட்காரும் போது வலது கால் இடது காலின் மீது போட்டுக் கொண்டு அமர்ந்தால் சூரிய ஆற்றல் மிகும். இடது கால் வலது காலின் மீது போட்டுக் கொண்டு அமர்ந்தால் சந்திர ஆற்றல் மிகும்.
எப்போதும் வலது காலை இடது கால் மீது போட்டுக் கொண்டு அமர்கின்றவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். இடது காலை வலது கால் மீது போட்டுக் கொண்டு அமர்கின்றவர்கள் சாந்தமானவர்களாக இருப்பார்கள்.
இருக்கையில் அமரும் போது அப்படி அமரலாம். தரையில் அமரும் போது என்ன செய்யலாம்?
தரையில் அமரும் போதும் முதலில் இடது காலை மடக்கிக் கொள்ளவும். அடுத்து வலது காலைத்தூக்கி இடது கால் மீது போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டால் சூரிய ஆற்றல் கிடைக்கும்.

Thursday, 15 June 2017

‘சூரிய’ பலன்கள்! கிரகச் சேர்க்கை

சூரியன் – சந்திரன்: - ஜனன ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் சேர்ந்து காணப்பட்டால், அந்த ஜாதகருக்கு ஸ்திரமான புத்தி இருக்காது. சதா மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். அவப்பெயருக்கு ஆளாக நேரிடுவதுடன் அரசாங்க தண்டனைக்கும் ஆளாகக் கூடும். கணவன் மனைவி இடையில் பணியின் காரணமாகவோ அல்லது கருத்து வேறுபாட்டின் காரணமாகவோ தற்காலிகமான பிரிவு ஏற்படும்.
சூரியன் லக்னாதிபதியாக இருந்தால், லக்னாதிபதி கெடுபலன் செய்ய மாட்டார் என்ற விதிப்படி மேற்கண்ட அசுப பலன்கள் சுப பலன்களாக மாறும். அதேபோல் சூரியனோ அல்லது சந்திரனோ அங்கு ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தாலும் கெடுபலன்கள் ஏற்படாது. மற்றுமொரு முக்கியமான விதியையும் குறிப்பிட வேண்டும். அதாவது கேந்திர ஸ்தானாதிபதியும் திரிகோணாதிபதியும் யாரோடு சேர்ந்திருந்தாலும், தான் நல்லது செய்வதுடன் தன்னுடன் இணைந்திருக்கும் கிரகத்தையும் நல்லது செய்யவைக்கும்.
சூரியன் – செவ்வாய்: – உடல் உஷ்ணம் அதிகம். நேரம் தவறாமையைக் கண்டிப்புடன் கடைப்பிடிப்பார்கள். ஆண்மைக்கு உரிய கம்பீரம் இவர்களிடம் கூடுதலாகவே காணப்படும்.  காவல்துறை, ராணுவம் போன்ற சீருடை சார்ந்த பணியாகவே இவர்களுக்கு அமையும். அதிக சகோதரர்களும் அவர்களால் ஆதாயமும் உண்டு. இந்த சேர்க்கையானது ஒரு பெண்ணின் ஜாதகத்தில் காணப்பட்டால், அந்தப் பெண்ணுக்கு தலைமைப் பண்பு நிறைந்திருக்கும். அந்த வீட்டில் மீனாக்ஷி ஆட்சிதான் நடக்கும் என்று சொல்லலாம். இந்த சேர்க்கை மேஷத்தில் காணப்பட்டால், மேலே சொன்ன பலன்கள் கூடுதலாக நடக்கும்.
சூரியன் – புதன்:- சூரியன், புதன் சேர்க்கை பெற்ற 8 பாகைகளுக்குள் ஜாதகர் பிறந்திருந்தால், புதனுக்கு அஸ்தங்க தோஷம் ஏற்பட்டு பலன் தராமல் போய்விடும். குறிப்பாக புதனின் தசா புக்தி காலங்களில் கெடுபலன்களே நடைபெறும். 8 பாகைகளுக்குப் பிறகு பிறந்தால்தான் பலன் தரும். சூரியன் புதனின் சேர்க்கையானது ஜாதகரை கணிதத்தில் நிபுணத்துவம் பெறவைக்கும். அரசாங்க வகையில் ஆதாயம் உண்டு. படிக்கவேண்டிய வயதில் படிக்காமல் தாமதமாகவே படிப்பை முடிப்பர். தகுதியைவிட உயர்ந்த இடத்தில்  வேலைக்குப் போவர். இவருடைய பணி பெரும்பாலும் அரசாங்கப் பணியாகவே அமையும். தாய்மாமன் உறவுமுறை சுமுகமாகவும் ஆதாயம் தருவதாகவும் இருக்கும். வாக்குத்திறமை பெற்றிருப்பர்.
சூரியன்-குரு:- சூரியன், குரு சேர்க்கை பெற்ற ஜாதகருக்கு பொதுவாக இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்று சொல்லலாம். பொன் சம்பந்தப்பட்ட வியாபாரம் செய்யும் குடும்பத்தில் இருந்து வாழ்க்கைத் துணை அமையும். கோயில் திருப்பணிகளிலும் சமூகநலப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்வர். நிதி அமைச்சகம், வங்கிகள், நிதிநிறுவனங்களில் வேலை அமையும். அத்தகைய பணியும்கூட தலைமையிடத்தில் இருக்கும். ஒருசிலர் பேராசிரியராகவும் பணிபுரிவர். இயல்பிலேயே ஆன்மிக நாட்டம் கொண்டிருக்கும் இவர்களில் சிலர் ஆன்மிக குருவாகவும் பிரகாசிப்பர்.
சூரியன் – சுக்ரன்:- சூரியன் சுக்ரன் சேர்க்கையானது ஜாதகருக்கு எதிர்பாராத பொருள்வரவைத் தரும். இவர்களுக்கு எதிலும் நஷ்டம் என்பதே ஏற்படாது. ராணுவத் தளவாடங்கள் விற்பனை மூலம் பணம் சம்பாதிப்பர். வசதியான குடும்பத்தில் இருந்து வாழ்க்கைத் துணை அமையும். அந்நியப் பொருள்களைப் பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகம் இருக்கும். விலை உயர்ந்த சொகுசு வாகன பிராப்தி இவர்களுக்கு உண்டு. இவருக்குச் சொந்தமான வீட்டில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்காது.
சூரியன் – சனி:- பகலில் பிறக்கும் குழந்தைகளுக்கு பித்ருகாரகன் சூரியன் என்றால், இரவில் பிறக்கும் குழந்தைகளுக்கு சனி பித்ருகாரகன். இந்தச் சேர்க்கையானது தந்தை மகன் உறவில் விரிசலை ஏற்படுத்துவதுடன், கோர்ட், கேஸ் என்றும் அலைக்கழிக்கும். அவ்வப்போது மன அமைதி பறிபோகும். சமையல் கலைஞராகவும், கேன்டீன் காண்ட்ராக்டராகவும் பணம் சம்பாதிப்பர். இரும்புக் கழிவுகளை வாங்கி விற்றும் ஜீவனம் நடத்துவர். கடினமான உழைப்பாளிகளான இவர்கள் அரசாங்கத்துடன் இணக்கமாக நடந்துக்கொள்வர். சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் பணம் சம்பாதிக்கவும், அதில் ஒரு பகுதியை ஆன்மிகப் பணிகளுக்குச் செலவழிக்கவும் தயங்கமாட்டார்கள். எதையுமே புதியதாக வாங்குவது இவர்களுக்குப் பிடிக்காது. மற்றவர்கள் பயன்படுத்திய கார், பைக் போன்றவைகளையே வாங்குவர்.
சூரியன் – ராகு:- சூரியன் ராகு சேர்க்கை அமையப் பெற்ற ஜாதகர்கள் சட்டத் துறையில் நிபுணத்துவம் பெற்றிருப்பர். எதிலும் மாற்றுச் சிந்தனையும், புரட்சிகரமான எண்ணங்களும் கொண்டிருப்பர். பிறருடைய சொத்துக்கள் எல்லாம் இவர்களுக்கு எதிர்பாராமல் வந்து சேரும். பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவைகளை ஏற்றுமதி செய்து பணம் சம்பாதிப்பர். இவர்களுக்கு அமையக்கூடிய பணியும்கூட மீன்வளத்துறை போன்று கடல் சார்ந்த பணியாகவே இருக்கும்.
சூரியன் – கேது:- ஆன்மிகவாதியாக இருப்பர். ஆன்மிகம் தொடர்புடைய மரங்களைக் கோயில்களுக்குக் கொடுப்பர். மரங்களை வெட்டி விற்பனை செய்வதால், இவர்கள் மரங்களை நட்டுப் பராமரிக்கவும் செய்வர். ஒருசிலர் காய்,கனி வகைகளை விற்றும் ஜீவனம் செய்வர். இவர்களுக்கு வனத்துறை சார்ந்த பணிகளே பெரும்பாலும் அமையும்.

குருவும் குணமும்! கிரகங்களின் சேர்க்கை

குரு – சூரியன்:
பெரியவர்களிடம் பக்தி சிரத்தை உடையவர்களாகவும், கல்வியில் திறமை கொண்டவர்களாகவும், தெய்வபக்தி மிகுந்தவர்களாகவும், பூஜை வழிபாடுகளில் சிரத்தை கொண்டவர்களாகவும் தார்மிக சிந்தனை உடையவர்களாகவும் திகழ்வார்கள். செல்வச் செழிப்புடன் இருக்கும் இவர்கள், படித்த பெரிய மனிதர்களின் நட்பைப் பெற்றிருப்பர். ஆசானாகவும், புத்திசாலியாகவும் இருப்பர். சண்டையிடுவதில் விருப்பம் கொண்ட வர்களாக இவர்கள் இருப்பதால், ராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றிருப்பர். செய்நன்றி மறவாத குணம் கொண்டிருப்பர்.

குரு – சந்திரன்:
சிவந்த மேனியுடன் திகழும் இவர்கள் அழகான, அகன்ற கண்களைப் பெற்றிருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் ஓரளவு நம்பிக்கை உடையவராக இருப்பர். கவலைகளை மறந்து சதா சிரித்துப் பேசும் குணமுடையவர். உறவினர்களாலும் நண்பர்களாலும் புகழ், பெருமைகளைப் பெற்றவராகவும், சாமர்த்தியசாலியாகவும் திகழும் இவர்கள் எல்லோருடனும் சகஜமாகப் பேசிப் பழகுவார்கள். கல்வி ஞானம் பெற்றவர்களாகவும், எடுத்த காரியத்தை முடிக்கும் சுபாவம் கொண்டவர்களாகவும்் இருப்பார்கள். மனதுக்குள் கோபம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
குரு – செவ்வாய்:
சிவந்த கண்களுடனும், கல்வி பயில்வதிலும், சாஸ்திர ஆராய்ச்சியிலும் திறமை வாய்ந்தவராகவும், தரும சிந்தனை, பரோபகாரம் ஆகிய குணங்களுடன் அழகாகவும், செல்வந்தர் களாகவும் விளங்கும் இவர்கள், தங்க நகைகளி னால் பொருள் ஈட்டுவதில் ஆர்வம் கொண்டிருப்பர். தெய்விக சிந்தை உடைய இவர்கள், ஆலய வழிபாடுகளில் அதிக ஈடுபாடு் கொண்டிருப்பர். கோயில் கட்டுதல் போன்ற சமூக நலம் சார்ந்த பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். மற்றவர்களால் பெரிய மனிதராக மதிக்கப்படுவர்.
குரு – புதன்:
ஆசார சீலராகவும், மன தைரியம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். நல்ல குணங்களுடன் நீதி நேர்மையைக் கடைப்பிடிக்கும் இவர்கள், புத்திக்கூர்மையுடன் வியாபார நுணுக்கங்களை அறிந்தவர்களாகவும் இருப்பர். கீர்த்தியுடன் திகழும் இவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டு. நல்ல குணங்களைப் பெற்றிருக்கும் இவர்கள் மனைவியின் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பர். சரும வியாதிகள் தோன்றக்கூடும் என்பதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். மற்றவர்களை  வசியப்படுத்தும் வகையில் கவர்ச்சிகரமாகப் பேசக் கூடிய திறமையைப் பெற்றிருப்பார்கள்.  மதுரமான வார்த்தைகளைப் பேசுபவராகவும் இருப்பர்.
குரு – சுக்ரன்:
குரு-சுக்ரன் சேர்க்கையானது அவ்வளவாக சிலாக்கியம் இல்லை. இந்த சேர்க்கை பெற்ற ஜாதகர்கள் கோபம், அகங்காரம் கொண்டவர்களாகவும், மற்றவர்களால் தூற்றப்படுபவர்களாகவும், நன்றி மறப்பவர்களாகவும் இருப்பார்கள். தான் நியாயமாக நடந்து கொள்ளாவிட்டாலும் மற்றவர்களுக்கு நியாயத்தை உபதேசிப்பதில் தயங்கமாட்டார்கள்.
குரு – சனி:

இந்த சேர்க்கையும்கூட அவ்வளவு சிலாக்கியமில்லை. அசைவ உணவில் விருப்பம் கொண்டிருப்பர். இவர்களின் வாழ்க்கையில் ஏழ்மையும் வறுமையுமே நிறைந்திருக்கும்.தைரியசாலிகளான இவர்கள், அலட்சியமாகவும் தற்பெருமையாகவும் பேசுவார்கள்.இவர்களுக்கு ஸ்திர புத்தி இருக்காது. எப்பொழுதும் வெளியில் சுற்றுவதில் ஆர்வம் கொண்டிருக்கும் இவர்களிடம் உண்மையான வார்த்தைகளை எதிர்பார்க்க முடியாது. ஆனாலும், எதிர்பாராத வகையில் இவர்களுக்கு பண வரவும், சொத்துக்களின் சேர்க்கையும் உண்டாகும்.
குரு – ராகு:
கல்வியில் ஊக்கம், வியாபார நுணுக்கங்களை துல்லியமாக அறியும் திறன் கொண்ட இவர்கள், ஜோதிட சாஸ்திரம் நன்கு அறிந்தவராகவும் பலன் கூறுபவராகவும் இருப்பார்கள். சங்கீதத்தில் பிரியமும், சாத்தியம் இல்லாத காரியங்களைக்கூட  சாதிக்க முயற்சி செய்பவராகவும் இருப்பார்கள். சாஸ்திரங்களைக் கற்பதுடன் பிறருக்கும் உபதேசித்து தானும் கடைப்பிடிப்பர். பேச்சு சாமர்த்தியமும் மற்றவர்களின் குணமறிந்து பழகும் தன்மையும் பெற்றிருப்பர்.
குரு – கேது:
ஆசார சீலர்களாகவும், வேதம் சாஸ்திரங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர்களாகவும், பல புத்்தக ஆராய்ச்சிகளைச் செய்பவர்களாகவும், உயர் பதவி, அந்தஸ்து, நேர்மை, வாக்கு நாணயம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். உறவினர், நண்பர்களை ரட்சிக்கும் மனம் பெற்றிருப்பர். திறமைசாலியாகவும் அழகாகவும், திகழும் இவர்கள் சங்கீதத்தில் பிரியமும் யாத்திரை செய்வதில் ஆர்வமும் கொண்டிருப்பார்கள். புத்திர ப்ராப்தி இல்லை என்றே சொல்லலாம். மாடு, ஆடுகளை வளர்ப்பதில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும். பிறருடைய வேலைகளில் தலையிட்டு, தானே முன்னின்று செய்து முடிப்பவராகவும் இருப்பர்.

சந்திர யோகம்’- கிரகங்களின் சேர்க்கை

சந்திரனுடன் மற்றொரு கிரகம் சேர்ந்திருந்தால் ஏற்படக்கூடிய பலன்கள் குறித்துப் பார்ப்போம்.
சந்திரன்- சூரியன்: சந்திரனுடன் சூரியன் சேர்ந்திருப்பது பித்ரு தோஷத்தைக் குறிப்பதாகும். அயல் தேசங்களுக்குப் போய் பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். எவ்வளவுதான் சம்பாதித்தாலும், செலவு செய்வதற்கு மிகவும் யோசிப்பார்கள். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் இருக்கும். அலட்சிய மனப்பான்மையுடன் நடந்துகொள்ளும் இவர்கள், பெற்றோரிடம் அதிக பாசம் செலுத்த மாட்டார்கள். இவர்கள் துவர்ப்புச் சுவை கொண்ட உணவுகளை விரும்பி உண்பர்.
சந்திரன்- செவ்வாய்: சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்திருப்பது, சந்திர மங்கள யோகம் எனப்படும். இவர்கள் மிகுந்த தைரியசாலிகளாக இருப்பர். பூமி, வாகனம் வாங்கி விற்பதன் மூலமும், மருத்துவம், மருத்துவ உபகரணங்கள் மூலமும் பணம் சம்பாதிப்பர். கடல்சார்ந்த பொருட்களாலும் இவர்களுக்கு லாபம் கிடைக்கும். பெரும்பாலும் இவருக்குச் சகோதரிகள் இருக்க மாட்டார்கள். இவர்கள் கசப்புச் சுவை கொண்ட உணவுகளை விரும்பிப் புசிப்பர்.
சந்திரன்- புதன்: சிறந்த அறிவாளிகள். ஜோதிடம், வானியல் ஆராய்ச்சி, கணக்கு தணிக்கைத் துறை, கல்வித் துறை போன்றவற்றில் இவர்களுடைய ஜீவனம் அமையும். சிலர் ஆன்மிகம் தொடர்பான துறைகளில் உயர்பொறுப்பு வகிப்பர். இவர்களுக்கு பெரும்பாலும் தாய்மாமன் உறவுமுறையிலேயே திருமணம் நடக்கும். தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டு. இவர்களுக்குப் பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கக்கூடும்.
சந்திரன்- குரு: சந்திரனுடன் குரு சேர்ந்திருப்பது, குரு சந்திர யோகம் ஆகும். பொன், நவரத்தினங்கள் போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். ஆன்மிகத்தில் புகழுடன் திகழ்வர். இவரைச் சுற்றி இருப்பவர்கள் இவர்களுக்கு உதவிகரமாகவே இருப்பர். இவர்களுக்குப் பெரும்பாலும் ஆண் குழந்தைகளே பிறக்கும். கோயில் கட்டுதல்,  பொதுநலப் பணிகள் போன்றவற்றில் ஆர்வத்துடன் ஈடுபடுவர்.
சந்திரன்- சுக்ரன்: பாட்டு, நடனம், ஓவியம், நடிப்பு போன்ற கலைகளில் தேர்ச்சியும் ரசனையும் பெற்றிருப்பர். தான் இருக்கும் இடத்தைச் சுத்தமாகவும் கலைநயத்துடனும் வைத்திருப்பர். தெய்விக ஈடுபாடு அதிகம் இருக்கும். அம்மனை வழிபடும் இவர்களுக்கு வாக்குப் பலிதம் உண்டு. பங்களா, சொகுசு கார் என்று வசதியாக வாழ்வர். குழந்தை பாக்கியம் இல்லையென்றே சொல்லலாம். ஒருசிலருக்கு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் வாய்ப்பு உண்டு. இனிப்பு இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
சந்திரன்- சனி: உழைப்பாளிகள். இரும்பு சம்பந்தமான பொருட்களின் மூலம் பணம் சம்பாதிப்பர். எத்தனை வசதிகள் இருந்தாலும் அனுபவிக்க முடியாதபடி சுற்றிக்கொண்டே இருப்பர். குடும்ப நலனுக்காகவே எப்போதும் பாடுபடுவர். அதிக காரமான உணவு வகைகளையே விரும்பிச் சாப்பிடுவர்.
சந்திரன்- ராகு: இந்த ஜாதகர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மாமனார், மாமியார் வகையில் தொல்லைகள் தொடர்ந்து ஏற்படும். கணவன்- மனைவிக்குள் அவ்வப்போது பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கும். இவர்களால் எந்த வேலையிலும் நிரந்தரமாக இருக்க முடியாது. அடிக்கடி பணி மாறிக்கொண்டே இருப்பர். தலைவலி, வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் ஏற்படும். உடன்பிறப்பு வகையிலும் பிரச்னைகள்தான். ஜாதகத்தில் சந்திரன்- ராகு சேர்க்கை பெற்றவர்கள், உரிய பரிகாரங்களைச் செய்துகொள்வதன் மூலமே பிரச்னைகளில் இருந்து விடுபடமுடியும்.
சந்திரன்- கேது: இவர்கள் அறிவுத் திறன் கொண்டவர்களாக இருந்தாலும், அதைச் சரியானபடி பயன்படுத்த மாட்டார்கள். இவர்களைப் புரிந்துகொள்வது கடினம். யாரிடமும் அதிகம் பேசமாட்டார்கள். இவர்களுக்கு வாக்குப் பலிதம் உண்டு. ஏதேனும் பொருள் காணாமல் போனால், அதுபற்றிய விவரங்களைச் சொல்லக்கூடிய ஆற்றல் இவர்களுக்கு உண்டு. இவர்களுக்கு எல்லாவிதமான மந்திரங்களும் ஸித்தியாகும்.

செவ்வாய் சேர்க்கை

செவ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முதலானவற்றுக்கு காரகத்துவம் வாய்ந்தவராகத் திகழ்பவர். பிற கிரகங்களுடனான இவரது சேர்க்கை, மிக முக்கியமான பலாபலன்களைத் தரவல்லது. அங்காரகனான இவர் எந்தெந்த கிரகங்களுடன் இணைந்து, என்னென்ன பலன்களை அளிப்பார் என்பதை அறிவோமா?

செவ்வாய் – சூரியன்: எப்போதும் சுறுசுறுப்பும் ஊக்கமும் கொண்டவர்கள், எடுத்த காரியத்தை திறமையுடனும், வெற்றியுடனும் செயல்படுத்துவதில் தீவிரமாக முனைவார்கள். தைரியம் மிக்கவர்கள். எதையும் நேருக்கு நேராகப் பேசுவார்கள். நல்ல குணங்களுடன் திகழ்வார்கள். பரந்த நோக்கம் கொண்டவர்கள்.  கூடப் பிறந்த தம்பிகளிடமும் தந்தையிடமும் அதிக பாசம் உள்ளவர்கள். வாழ்க்கையில் சிரமங்களும், சண்டை சச்சரவுகளும் அதிகமாக இருக்கும். கடைசி வரை உழைத்துக்கொண்டே இருப்பார்கள். உடலில் உஷ்ணம் அதிகமாக இருக்கும்.
செவ்வாய் – சந்திரன்: சிவந்த மேனியுடன், அழகான உடல் அமைப்பு பெற்றிருப்பர். கல்வியில் திறமை வாய்ந்தவர்களாக இருக்கும் இவர்கள், ஆசார அனுஷ்டானங்களிலும் தெய்வ வழிபாடுகளிலும் சிரத்தையுடன் ஈடுபடுவார்கள். விவசாயத்தொழில், ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில் போன்ற துறைகளில் ஈடுபடுவர். குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்களாகவும், அடிக்கடி ஜலதோஷத்தால் பாதிப்படைபவர்களாகவும் இருப்பர். மனைவியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். முத்து, பவழம் முதலியவைகளை வியாபாரம் செய்வர்.
செவ்வாய் – புதன்: தாய்மாமன் வகையில் வாழ்க்கைத் துணை அமையும். எதிர்பாராத வகையில் சொத்துச் சேர்க்கை உண்டாகும். புளிப்பு, காரம் இவைகள் அதிகமுள்ள உணவு வகைகளை   விரும்பிச் சாப்பிடுவார்கள். ராணுவத்தில் கணக்குத் துறையுடன் தொடர்புடைய வேலையில் அமர்ந்திருப்பார்கள். நல்ல உயரமும் பருமனும் கொண்டிருக்கும் இவர்கள் செய்யும் தொழிலில் இவர்களது பிள்ளைகளும் ஆர்வத்துடன் ஈடுபடுவர். அந்தஸ்தில் குறைந்தவர்களிடம் அலட்சியத்துடனும், அதிகாரத்துடனும் நடந்துகொள்வார்கள். சொந்த வீட்டில் இவர்களால் இருக்க முடியாது. ஓரளவு தானம், தர்மம் செய்வார்கள்.
செவ்வாய் – குரு: பெரியவர்களிடம் பக்தி காட்டுவர். ஆடம்பரமின்றி அமைதியான குடும்பம் அமையும். கௌரவமான உத்தியோகத்தில் இருந்துகொண்டு  வீடு, வாசல், வாகன சுகங்களை அனுபவிப்பர். ஆண் குழந்தைகளே அதிகம் பிறக்கும். மடம், கல்வி அறக்கட்டளை போன்ற சமூக நலப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். சகல சுகங்களையும் அனுபவிப்பர். கல்வித் தகுதி குறைவாக இருந்தாலும் நல்ல உத்தியோகம்  அமையும். மூதாதையர் சொத்துக்களை அனுபவிக்க கூடியவர்களாக இருப்பார்கள். அலுவலகத்தில் எதிரிகள் இருந்தாலும் அவர்களால் பாதிப்புகள் இருக்காது.
செவ்வாய் – சுக்கிரன்: தாயாருக்கு உடல்நலம் அவ்வப்போது பாதிக்கும். தாயாருடனான உறவு சுமுகமாக இருக்காது. எதிரிகளைப் பற்றிய அச்சம் இருந்துகொண்டே இருக்கும். கடன்களும் தொல்லை கொடுக்கும். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வர். அழகான உடல் அமைப்புடன் ராஜ கம்பீரம் பெற்றுத் திகழ்வார்கள். விரோதங்கள் நிறைந்திருந்தாலும் சபையில் மரியாதையுடன் நடத்தப்படுவர். மனைவி வழியில் ஆதரவு இருக்காது. கடல் வாழ் பொருள்கள் சார்ந்த வியாபாரம் செய்வர்.
செவ்வாய்- சனி: இரும்பு, திராவகம் தொடர்புள்ள வியாபாரம் செய்வார்கள். தந்திரசாலிகளாக நடந்துகொண்டு காரியம் சாதிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். திடமான சரீரம் கொண்டவர்களாக இருப்பர். சுக சௌகர்யங்களுடன் வாழ விரும்புவார்கள். மாந்திரீக சக்தியைப் பெற்றிருப்பர். மனைவியிடம் மிகுந்த அன்புடன் இருப்பார்கள். பெரிய குடும்பத்தைப் போஷிப்பவர்களாகவும்,  சிறந்த கவிஞர்களாகவும் திகழ்வார்கள். நண்பர்களின் கலக வார்த்தைகளைக் கேட்கவும், அதனால் அவ்வப்போது சஞ்சலத்துக்கு ஆட்படவும் நேரிடும்.
செவ்வாய் – ராகு: அடிக்கடி வீண் செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் விருப்பம் இருக்காது. தீய நண்பர்களின் சேர்க்கையும் அதனால் தொல்லைகளும் உண்டாகும்.  தகாத செயலில் ஈடுபட்டு சிறைக்குச்  செல்லக்கூடிய  வாய்ப்புகள் அதிகம். வீட்டை விட்டும், நாட்டை விட்டும் பிரிந்து வசிக்க நேரிடும். உறவினர்களுடன் பகைமை கொண்டிருப்பர். தெய்வ நம்பிக்கை, சாஸ்திர நம்பிக்கை குறைவாக இருக்கும். மனைவி, மக்களிடத்தில் பிரியமாக இருப்பர். பழைய வாகனங்களை வாங்குவதில் விருப்பம் இருக்கும். வியாபார நோக்கில் பழைய வீட்டை வாங்கிப் புதுப்பித்து லாபத்துக்கு விற்பர்.
செவ்வாய் – கேது: வாழையடி வாழையாக இவருடைய வம்சம் தழைத்தோங்கும். ஆண்குழந்தைகளே அதிகம் பிறக்கும். உடல் வலிமையும், தேஜஸும், நல்ல குணங்களும், அழகான கண்களும் கொண்டிருக்கும் இவர்கள் தர்ம சிந்தை உள்ளவர்களாகத் திகழ்வர். எங்கும் எதிலும் இவர்களுக்கு வெற்றியே உண்டாகும். இவர்களில் சிலர் ஆகம சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றிருப்பர். எங்கும் எதிலும் வெற்றியே பெறுவர். ஏரி, குளம், கிணறு வெட்டுதல், கோயில் நிர்மாணம் போன்றவைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். உடன்பிறந்த சகோதரர்களிடம் அதிக பாசம் கொண்டிருப்பதுடன் அவர்களுக்குப் பல வகைகளிலும் உதவிகரமாக இருப்பர். பூர்வஜன்மம் பற்றிய ஞானம் இருக்கும்.

சுகங்களைத் தரும் சுக்ரன்… கிரகங்களின் சேர்க்கை

சுக்ரன் – சூரியன்:
இந்தச் சேர்க்கை நல்ல இடத்தில் அமைந்திருந்தாலோ அல்லது இந்தச் சேர்க்கை உள்ள இடத்துக்கு குருவின் பார்வை அல்லது சேர்க்கை ஏற்்பட்டிருந்தாலோ அசுப பலன்கள் நீங்கி, பெரிய மனிதர்களின் தொடர்பையும், செல்வச் செழிப்பான வாழ்க்கையையும் பெற்றிருப்பார்கள்.
மற்றபடி, இந்தச் சேர்க்கை அவ்வளவாக சிலாக்கியம் இல்லை. இந்தச் சேர்க்கை கொண்ட ஜாதகர்கள், கலகம் செய்வதில் ஈடுபடுவர். தகாத குணமும் நடத்தையும் கொண்டவர்கள். பெண்களாக இருந்தால், கணவன் வீட்டாரின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்வர். பிறரை ஏமாற்றுவதில் சாமர்த்தியசாலிகள். ஒருவர் செய்த நன்மைகளை உடனுக்குடன் மறந்துவிடுவர்.
சுக்ரன் – சந்திரன்:


இந்த சேர்க்கையை பெற்றவர்கள், நிறைந்த கல்வி அறிவும், புத்தி சாதுரியமும் கொண்டவர்கள். சகல சுக செளகரியங்களையும் பெற்றிருப்பார்கள். பிறருக்கு உதவி செய்யத் தயங்கமாட்டார்கள். மூர்க்கத்தனம், பிடிவாத குணம் போன்றவற்றைத் தவிர்த்துக்கொள்வது அவசியம். இவர்களின் சிறிய வயதிலேயே தாயைப் பிரிய நேரிடும். இந்தச் சேர்க்கை அமையப் பெற்ற ஜாதகர்கள் பெண்களிடம் பேசுவதற்கு சங்கோஜப்படுவார்கள்.
சுக்ரன் – செவ்வாய்:
அழகான தோற்றமும் ஆரோக்கியமான உடலமைப்பும் பெற்றிருக்கும் இவர்கள், சத்தமாகப் பேசுபவர்கள். மிகுந்த தைரியசாலிகள். எதையும் சாமர்த்தியமாகத் திட்டமிட்டுச் செய்து, வெற்றி பெறக் கூடியவர்கள். எப்படியாவது தங்கள் காரியம் நிறைவேறினால் போதும் என்று நினைக்கக்கூடியவர்கள். கலைகளில் பிரியம் உள்ள இவர்கள் பொறுமைசாலிகளும்கூட! என்னதான் செல்வந்தர்களாக இருந்தாலும்கூட, இரக்க குணமோ, தர்ம சிந்தனையோ, உதவும் மனப்பான்மையோ இவர்களிடம் இருக்கும் என்று சொல்ல முடியாது.

சுக்ரன் – புதன்:
அன்பும் பாசமும் நிறைந்த இவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். எப்போதும் நேர்மையுடன் நடந்துகொள்வார்கள். எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டு, வெற்றிவாகை சூடுவார்கள். நல்ல பேச்சாளர்கள். சிந்தித்துச் செயலாற்றும் திறன் கொண்ட இவர்களால் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாது. கலகலப்பாக எல்லோரிடமும் பேசிப் பழகக்கூடியவர்கள். இவர்களுக்கு இயல்பிலேயே நகைச்சுவை உணர்வு அதிகம் இருக்கும். வாழ்க்கையில் எல்லாவிதமான சுகபோகங்களையும் அனுபவித்து வாழ்வார்கள்.
சுக்ரன் – குரு:
இவர்கள் எந்த ஒரு கருத்தையும் ஆதரித்தும் மறுத்தும் பேசக்கூடிய திறமை கொண்டவர்கள். இரக்க மனம் கொண்ட இவர்களுக்குப் பிடிவாத குணமும் சேர்ந்தே இருக்கும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பார்கள். பிறரை எளிதில் நம்பிவிட மாட்டார்கள். குறைவான உழைப்பில் நிறையச் செல்வம் பெற நினைப்பவர்கள். சொத்துக்களைச் சேர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பார்கள். ஆசைகள் அதிகம் இருக்கும். காரியம் ஆக வேண்டுமானால் எதையும் செய்யக் கூடியவர்கள். எப்பொழுதும் எதிலும் போராடிக்கொண்டே இருப்பதான வாழ்க்கையே அமையும்.
சுக்ரன் – சனி:
கம்பீரத்தோற்றத்துடன் காணப்படும் இவர்களுக்கு நல்லது எது, கெட்டது எது என்று பகுத்துப் பார்க்கத் தெரியாது. வீட்டில் மீனாட்சியின் ஆட்சிதான்! திடசித்தம் கொண்ட  இவர்களுக்கு இருக்கக்கூடிய முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. அதேபோல், சஞ்சல குணத்தையும் விட்டுவிட வேண்டும். நீதி நேர்மையைக் கடைப்பிடிப்பதுடன், உண்மையா னவர்களாகவும் நடந்துகொள்வார்கள் இவர்கள். 
சுக்ரன் – ராகு:
மனைவியிடம் அதிக அன்பும் பாசமும் கொண்டிருப்பார்கள். எண்ணிய காரியங்களை எண்ணியபடியே முடிப்பதில் வல்லவர்கள். மக்கள் நலப் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் ஈடுபடுவார்கள். வீடு, நிலங்கள், மாடு கன்றுகள், செல்வம், செல்வாக்கு அனைத்தும் பெற்றிருப்பார்கள். எந்த வேலையாக இருந்தாலும், அதில் ஊக்கத்துடன் ஈடுபடுவார்கள். மற்றவர்களால் புகழத்தக்க அளவுக்கு இவருடைய செயல்பாடுகள் அமைந்திருக்கும். இந்தச் சேர்க்கை சரியான இடத்தில் அமையப் பெறாத ஜாதகர்கள் எப்பொழுதும் கவலை தோய்ந்த முகத்துடனும் நோயாளியாகவும் காணப்படுவார்கள்.
சுக்ரன் – கேது:
ஆன்மிகத்தில் ஈடுபாடும், திருக்கோயில்களைத் தரிசிப்பதில் விருப்பமும் கொண்டிருக்கும் இவர்கள் பூஜை வழிபாடுகளைச் சிரத்தையுடன் செய்வார்கள். எந்த ஒரு காரியம் என்றாலும், அதுபற்றித் தீவிரமாக யோசித்த பிறகே ஈடுபடுவார்கள். நீதிநேர்மையுடன் இன்னும் பல நல்ல குணங்களையும் கொண்டிருக்கும் இவர்கள் அழகான ஆடை ஆபரணங்களை அணிய விரும்புவார்கள். கவிஞர்களாகவும் ஆசிரியர்களாகவும் புகழுடன் திகழ்வார்கள். இவர்களில் சிலர் ஜோதிடத்திலும், மந்திர தந்திரங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். இவர்களுக்குப் பெரும்பாலும் பித்தம் சம்பந்தமான நோய்களே ஏற்படும். எக்காரணத்தைக் கொண்டும் சொன்ன சொல்லை மீறமாட்டார்கள்.