33 கோடி தேவர்களில் குலதெய்வம் யார்
என்பதை எப்படி கண்டு பிடிப்பது?
எனக்கு ஒரு பழக்கம் உண்டு. எங்காவது ஒரு ஆலயத்துக்குச் சென்றால் அங்கு ஏதாவது விவரம் அறிந்த பண்டிதர் இருந்தால் அவர்களிடம் தெய்வ சம்மந்தமாக ஏதாவது கேட்டு தெரிந்து கொள்வது உண்டு. என்னிடம் யாராவது மாட்டிக் கொண்டு விட்டால் லேசில் விடுவது இல்லை. கேட்டு முடித்தப் பின் தட்சணையாக ஏதாவது தருவதை மறப்பதில்லை. இந்த முறையும் ஒருவர் வசமாக மாட்டிக் கொண்டார். ஒரு சமயம் ஒரு கிராமத்தில் இருந்த ஆலயத்துக்கு சென்ற இருந்தபோது அங்கு ஒரு வயதான பண்டிதர் போன்றவர் இருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது குல தெய்வத்தைப் பற்றிய சந்தேகத்திற்கு விளக்கம் கேட்டேன். அவர் அதற்கு ஒரு பிரசங்கமே கொடுத்து விட்டார். அதைக் கேட்டபோது மிக அற்புதமாக இருந்தது. அதன் பிறகு நாங்கள் ஆலயத்தை சுற்றி விட்டு வந்தபோது அவரை அங்கு காணவில்லை. நான் தவறு செய்துவிட்டதாகத் தோன்றியது. அவர் பெயரையோ, எங்கு இருக்கின்றார் என்பதையோ கேட்டுக் கொள்ளவில்லை. அங்கும் இங்கும் தேடியும் அவரைக் காணவில்லை. எனக்காகவே அவர் அங்கு வந்திருந்தது போல இருந்த அவர் யார்? தெரியவில்லை, ஒரு கனவு போல வந்தார், சென்றார் என ஆகிவிட்டது. ஆனால் குலதெய்வம் பற்றி அவர் கொடுத்த பிரசங்க விளக்கமே சரியானதாக இருந்தது . பண்டிதர் கொடுத்த தகவல் இது:
குல தெய்வம் யார் எனத் தெரியாதவர்கள்
என்ன செய்ய வேண்டும்?
'' முன் காலத்தில் சில கிராமப்புறங்களில் இருந்த பிராமணர்களுக்கு தமது குல தெய்வம் யார் என்று தெரியாமல் இருந்தபோது அவர்கள் நதியில் குளித்து விட்டு பூமியில் இருந்து ஒரு பிடி களி மண்ணை எடுத்து வருவார்கள். வீட்டிற்கு வந்து அதை பிள்ளையார் பிடிப்பதைப் போல பெரியதாக பிடித்து மஞ்சள் குங்குமம் இட்டு அதையே தமது குலதெய்வமாக வணங்கி பூஜிப்பார்கள். குல தெய்வம் யார், அது ஆணா, இல்லை பெண்ணா என்பது என்பது தெரியாததினால் உருவமற்ற அதை ஒரு பீடத்தில் (அந்த காலத்தில் மரப்பலகைகள் நிறையக் கிடைக்கும் என்பதினால்) சந்தனத்தினால் ஒரு கட்டம் போட்டு அதில் வீபுதி மற்றும் மஞ்சள் குங்குமத்தையும் தூவி களி மண்ணால் செய்த பிள்ளையார் பிடியைப் போன்ற அந்த குலதெய்வ களிமண் தெய்வத்தை அதன் மீது வைத்து அதையே தமது குல தெய்வமாக எண்ணி பூஜை செய்வார்கள். வீபுதியையும், மஞ்சள் மற்றும் குங்குமத்தை தூவுவது எதற்காக என்றால் குல தெய்வம் யார், அது ஆணா, இல்லை பெண்ணா என்பது தெரியாததினால் ஆண், பெண் என்ற இருவருக்கும் பொருந்தும் வகையில் ஆணான குல தெய்வமாக இருந்தால் சந்தனம் மற்றும் வீபுதியையும், பெண்ணான குல தெய்வமாக இருந்தால் சந்தனம் மற்றும் குங்குமத்தையும் இடுவதான ஐதீகம் கொண்டு அதை செய்வார்கள் . பூஜை முடிந்ததும் பூஜை அறையில் அந்த களிமண் பிடியை தமது குல தெய்வமாக கருதிக் கொண்டு ஸ்வாமி பீடத்தில் பத்திரமாக பாதுகாப்பாக உடையாமல் வைத்து விடுவார்கள். அதையே தமது குல தெய்வமாக வணங்கி வரும்போது ஒரு கட்டத்தில் நிச்சயமாக அவர்களுடைய குலதெய்வம் அவர்கள் கனவிலோ அல்லது யார் மூலமாகவோ வந்து அவர்களுக்கு தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும். இது சத்தியமான உண்மையாகவே இருந்தது''
எப்படி களிமண் உருவை படைத்து அதை பூஜித்தார்கள் என அவர் கொடுத்த விவரத்தை மேலே உள்ள படத்தில் கொடுத்து உள்ளேன் . அவர் மேலும் கூறுகையில் 'ஒரு தவறை செய்யக்கூடாது' என எச்சரித்தார்.
''பூமியில் இருந்து எடுத்த களி மண்தானே என அதை அலட்சியப்படுத்தி விடக் கூடாது. எப்போது அந்த மண் பிடியை குல தெய்வத்தின் உருவம் என்று கருதி பூஜிப்போமோ அப்போதே அதில் நம்மை அறியாமல் நம்முடைய குல தெய்வங்கள் வந்து குடியேறும். ஆகவே அதை தமது குல தெய்வம் அடையாளம் தெரியும் வரை பத்திரமாக, உடையாமல் பாதுகாத்து வர வேண்டும். தேவை என்றால் தெய்வங்களை வைத்து உள்ள இடத்திலோ, பூஜை அறையிலோ ஒரு சிறிய பிளாஸ்டிக் பெட்டியிலாவது வைத்து அதை பத்திரமாக வைத்து பாதுகாக்க வேண்டும். மேலும் அதற்கு தினமும் ஒரு பூவாவது, அது முடியவில்லை என்றால் அதன் பீடத்தில் சிறிது குங்குமத்தையாவது தூவி ' குல தெய்வமே, எனக்கு உன்னை அடையாளம் காட்டுவாயா' என பிரார்த்தனை செய்து வணங்கி வர வேண்டும். வேறு எந்த பூஜையும் செய்யத் தேவை இல்லை. ஆனால் நிச்சயமாக அவரவர் பிராப்தம் போல எப்போது அவர்களுக்கு தன்னைப் பற்றிய விவரம் தெரிய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுமோ அப்போது அவர்களுக்கு குல தெய்வம் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் என்பதில் சற்றும் சந்தேகம் கிடையாது. எப்போது அவர்கள் தமது குல தெய்வத்தை அடையாளம் கண்டு கொள்கின்றார்களோ அதன் பின் அவர்கள் எப்போது அந்த ஆலயத்துக்கு செல்வார்களோ அப்போது தமது குல தெய்வமாக வணங்கி வந்த மண் பொம்மையை எடுத்துக் கொண்டு அந்த ஆலயத்தில் குல தெய்வத்தை வணங்கியப் பின் ஆலய ஸ்தல விருஷத்தின் கீழ் அல்லது ஆலயத்திலேயே ஏதாவது ஒரு மூலையில் அந்த பொம்மையை வைத்துவிட்டு வருவார்கள். அல்லது ஆலயத்தில் குளம் இருந்தால் அந்த நீரில் அதைப் போட்டு விட்டு வருவார்கள்'' . என்று கூறினார். குல தெய்வம் என்பது எத்தனை ஜென்மங்களுக்குப் பொருந்தும், வம்சக் கணக்கு என்பது என்ன என்ற கேள்வி எழுந்தபோது அவர் கூறிய கீழே தந்துள்ள விவரங்கள் ஆச்சர்யமாக இருந்தன.
குல தெய்வம் எத்தனை ஜென்மங்களுக்கு
ஒரு வம்சத்தைக் காப்பாற்றும்?
சாதாரணமாக ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் குடும்பங்களைக் காப்பாற்றும் என்பது பெரிய நம்பிக்கை. ஏழேழு ஜென்மம் என்பது 7x7 அதாவது 49 ஜென்ம ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு. 49 என்பதின் கூட்டுத் தொகை 4+9 = 13 . இந்த எண்தான் ஒருவருடைய வம்சத்தை நிர்ணயிக்கும் முக்கியமான எண். ஒருவர் இறந்து விட்டால் பதிமூன்றாம் நாள் அன்று கிரேக்கியம் என்ற நல்ல காரியத்தை செய்வது பழக்கம். அன்றுதான் உடலை விட்டு வெளியேறிய ஆத்மா சொர்கத்தை அடைகின்றது என்று நம்புகிறோம்.
அது போலத்தான் இறுதிக் காலமாக 13 என்ற அந்த காலத்தைக் குறிக்கும் விதத்தில் 49 ஜென்ம காலமான 13 ஜென்மத்துடன் ஒரு வம்சம் முடிவடைகின்றது என்று நம்பப்படுகின்றது . அதாவது எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் அந்த வம்சத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஏழேழு ஜென்மங்களுக்கு மேல் எந்த வம்சத்தினரும் இருக்க மாட்டார்கள். ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு - வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள்.
வம்சக் கணக்கு என்பது என்ன?
வம்சம் என்பது எப்படி கணக்கிடப்படுகின்றது? ஒருவருக்கு பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன் என ஆண் குழந்தை மட்டுமே வம்சத்தில் கணக்கில் வரும். ஒருவருடைய சராசரி வயது 50 என்றால் கூட அவருடைய தாத்தாவின், தாத்தாவின் பெரும் தாத்தாவின் காலம் என 13 ஜென்மங்களுக்கு முந்தய காலம் எனக் கணக்கிட்டால் 13 x 50 = 650 ஆண்டுகள் என வரும். யாருக்காவது 650 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அவர் சந்ததியினர் யார் என்பது தெரியுமா? அதை விட சிறிய கேள்வி, யாருக்காவது அவர்களுடைய குடும்பத்தில் 13 ஆம் வம்சத்தின் பெரிய தாத்தா யார் என்பது தெரியுமா? இதையெல்லாம் யார் குறித்து வைத்துக் கொண்டு வருகிறார்கள்? அதனால்தான் ஒரு குல தெய்வம் ஏழேழு ஜென்மம் அதாவது 49 ஜென்மங்களுக்கு அதாவது 13 ஜென்ம காலத்துக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும் என்ற வார்த்தை வந்தது.
மகள் என்பவள் திருமணம் ஆனதும் புகுந்த வீட்டிற்குச் சென்று விடுவதினால் அவளுக்கு தாய்-தந்தையின் குல தெய்வத்தை தனது குல தெய்வமாக ஏற்க பாத்யதை இல்லை. அவள் புகுந்த வீட்டின் குலதெய்வமே அவள் குல தெய்வம் ஆகி விடும்.
பலருக்கு குல தெய்வம் யார் என்பது
ஏன் தெரியாமல் உள்ளது?
இதற்குக் காரணம் பூர்வ ஜென்மத்தில் ஏற்பட்ட சாபம் அல்லது முன்னோர்கள் செய்த அலட்சியமே காரணம் . முன்னர் எல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் தமது மகன்களுக்கு தாம் வணங்கும் குல தெய்வம் யார், அந்த ஆலயம் எங்கு உள்ளது என்பதைக் கூறுவார்கள். சில வருடங்களுக்கு ஒரு முறையாவது தமது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று பூஜித்து விட்டு வருவார்கள். வீடுகளில் குல தெய்வ உண்டியல் இருக்கும். அதில் தமது காணிக்கைகளை போட்டுக் கொண்டே இருப்பார்கள். அவ்வபோது தாம் போக முடியாவிடிலும் குடும்பத்தில் யார் அங்கு செல்கிறார்களோ அவர்களிடம் அந்த காணிக்கைப் பணத்தை தந்து உண்டியலில் சேர்த்து விடுமாறு கூறுவார்கள். தமது பிள்ளைகள் வெளியூருக்குப் போகும்போது அவர்களுக்கு குல தெய்வம் யார் என்பதைக் கூறி குல தெய்வத்தின் படத்தையும் தருவார்கள். அது மட்டும் அல்ல எந்த ஒரு நல்ல காரியமும் வீட்டில் நடக்கும்போது, முதல் பிரார்த்தனை குல தெய்வத்திற்குத்தான் நடைபெறும். அதற்குப் பின்னரே மற்ற பூஜைகள் துவங்கும்.
ஆனால் காலபோக்கில் ஏற்பட்ட நாகரீக மாற்றங்களினால் வெளியூர் செல்லும் பிள்ளைகள் குல தெய்வம் என்ற கருத்தை மறந்து விட்டார்கள். தங்கும் இடமே என்ன என்பது தெரியாதபோது குல தெய்வத்தின் நினைவு அவர்களுக்கு எப்படி இருக்கும். குல தெய்வத்தின் படம் கூட அவர்களிடம் இருக்காது. திருமணம் ஆகி வேலைக்கு சென்றதும் கிடைக்கும் விடுமுறை நாட்களிலும் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வெளியே செல்வதும், வெளியூர் செல்வதும் பழக்கமாகி விட்டது. ஆனால் சில வருடங்களுக்கு ஒரு முறையாவது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று வணங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இல்லை. குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு மொட்டை அடிக்கும்போது மட்டுமே குல தெய்வத்தை தேடுவார்கள். அது தெரியவில்லை என்றால் அதுவும் ஒரு சடங்கு போல பழனி, திருப்பதி அல்லது வைதீஸ்வரன் ஆலயம் என எங்காவது சென்று மொட்டைப் போட்டு விட்டு வந்து விடுவார்கள்.
அது மட்டும் அல்லாமல் காலப் போக்கில் தமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முடிவு தேட புதுப் புது சாமியார், சன்யாசிகள் மற்றும் தெய்வப் பிறவிகள் என ஓடுகிறார்கள். அவர்கள் கூறுவதை செய்வார்கள். ஆனால் தம்முடைய குல தெய்வத்தை நினைக்க மாட்டார்கள். அதற்கு மேலும் அந்த சாது, சன்யாச, தெய்வப் பிறவிகளும் முதலில் உங்கள் குல தெய்வத்திற்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற நியதியை அறிவுறுத்த மாட்டார்கள். அப்படி செய்தால் அவர்கள் என்ன ஆவது ?
இப்படி எல்லாம் இருப்பதினால்தான் குல தெய்வத்தை மறந்து விடுபவர்களும், குலதெய்வ சிந்தனை இல்லாமல் இருப்பவர்களும், அப்போது தம்மையே அறியாமல் ஒரு சடங்கு போல வீட்டில் நடக்கும் அனைத்து பூஜை, பண்டிகைகளையும் கொண்டாடும்போது தாம் குல தெய்வத்தை மறந்து விட்டோமே என்ற எண்ணம் இருப்பது இல்லை. அப்படி செய்யும் தவறு தெரிவது இல்லை. என்னதான் எந்த ஆலயத்தில் சென்று சடங்கை செய்தாலும் குல தெய்வத்தை மறப்பது பெற்றோர்களையே மறப்பது போன்றதே என்ற தவறு தெரிவது இல்லை. அதனால் அவர்கள் குல தெய்வத்தின் சாபங்களுக்கு ஆளாகி விட அது அவர்கள் வம்சத்தை பல வகைகளிலும் பாதிக்கின்றது. அந்த குல தெய்வ சாபம் அந்த குடும்பத்தினருக்கு தொடரும்.
My name is Dr. Ashutosh Chauhan A Phrenologist in Kokilaben Hospital,We are urgently in need of kidney donors in Kokilaben Hospital India for the sum of $500,000,00 USD, (3 Crore INDIA RUPEES) All donors are to reply via Email only: hospitalcarecenter@gmail.com or Email: kokilabendhirubhaihospital@gmail.com
ReplyDeleteWhatsApp +91 7795833215