Tuesday, 28 April 2015

மோகினி ஏகாதசி.

நாளை (29.04.15) – மோகினி ஏகாதசி.
இந்த ஏகாதசி விரதத்தினால் ஒருவரின் மனதில் உள்ள ஆழ்ந்த வேதனைகளும், துன்பங்களும், தடைகளும் நீங்கி வாழ்வில்
சுகம் பெறுவர் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக்கிறார். அதனை நாமும் காண்போம்.
ஹே யுதிஷ்டிரா !! ஒருமுறை மகரிஷி வசிஷ்டர் பிரபு ஸ்ரீராமனுக்கு கூறிய கதையினை இப்போது உனக்கு கூறுகிறேன். கவனமாகக் கேள் என்று கூறத் தொடங்கினார்.
ஒருசமயம் பிரபு ஸ்ரீராமர் மகரிஷி வசிஷ்டரிடம், குருதேவா !! ஜனகநந்தினி சீதையின் பிரிவினால் சொல்லவொணா துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இதிலிருந்து விடுபடவும், அனைத்து பாவங்களையும் அழித்து மகிழ்ச்சியை அளிக்கவல்ல விரதம் ஏதேனும் இருந்தால் கூறுங்கள் என வேண்டினார்.
அதனைக் கேட்ட மகரிஷி வசிஷ்டர், ராமா !! ஆழ்ந்த அறிவாற்றலைக் கொண்டவனே !! ஜகத்தின் நன்மை கருதி நீ கேட்ட இந்த கேள்விக்கு விடையளிக்கிறேன். மோகினி ஏகாதசி விரத மகாத்மியத்தை உனக்கு கூறுகிறேன், கவனமாகக் கேள் என்று கூறத் தொடங்கினார்.
மோகினி ஏகாதசி விரத மகாத்மியத்தால் ஒரு மனிதனுடைய பாவங்களும், துக்கங்களும் அழிக்கப் படுகின்றன. மேலும் இந்த விரதத்தின் பிரபாவத்தினால் மனிதர்கள் மோகம் என்னும் மாயையிலிருந்து விடுதலை பெறுவர். துக்கம் மற்றும் வாழ்வில் மிகவும் துயரத்தில் அவதிப்படுபவர்கள் நிச்சயம் இந்த விரதத்தினை அனுஷ்டிக்க வேண்டும். அதன் மகாத்மிய கதையை கவனமாகக் கேள் !!
முன்னொரு காலத்தில், சரஸ்வதி நதிக்கரையில் பத்ராவதி என்னும் வளமான நகரை த்யுதிமான் என்னும் அரசன் சீரும், சிறப்புமாக ஆண்டு வந்தான். அங்கே தனபாலன் என்கிற வியாபாரி ஒருவன் பரம விஷ்ணுபக்தனாக, பக்தர்களுக்கு சேவை சாதித்து வாழ்ந்து வந்தான். அவனுக்கு சுமனா, சத்புத்தி, மேதாவி, சுக்ரீதி, திருஷ்டபுத்தி என 5 புதல்வர்கள் இருந்தனர்.
அவற்றுள் திருஷ்டபுத்தி பாவியாகவும், துஷ்டனாகவும் விளங்கினான்.தெய்வம், பித்ருக்கள் என்று எவரையும் நம்பாமல், மதிக்காமல் தந்தை ஈட்டும் செல்வத்தினை மது, மாது, சூது என பல தீய வழிகளில் செலவிட்டு வந்தான்.
ஒருமுறை அவன் சாலையில் அனைவரும் அறியும் வகையில் ஒரு விலைமாதுவுடன் தோளில் சாய்ந்து கட்டிக்கொண்டு போவதைக் கண்ட தனபாலன், மற்றும் அவனது சகோதரர்கள், உறவினர்கள் அனைவரும் அவனை வெறுத்து ஒதுக்கத் துவங்கினர். தனபாலன் அவனை வீட்டை விட்டே துரத்தியடித்தான்.
வீட்டை விட்டு வெளியேறிய திருஷ்டபுத்தி, அவனிடம் இருந்த விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களை விற்று வாழ்ந்து வந்தான். அவனது பணம் தீர்ந்தவுடன் அவனுடன் இருந்த துஷ்ட நண்பர்களும், வேசிகளும் அவனை விட்டு விலகினர்.
பசியில் வாடிய அவன், வேறு வழியின்றி, திருடுவது என்று முடிவுக்கு வந்தவனாக இரவு நேரங்களில் திருடி பிழைப்பு நடத்தி வந்தான். ஒருமுறை நகர காவலர்கள் அவனை பிடித்து விட்டனர். ஆனால் அவன் தந்தையின் நன்னடத்தை கருதி மன்னித்து விட்டு விட்டனர். ஆனால் இரண்டாவது முறை பிடிபட்ட போது அவனை அரசன் முன்னிலையில் நிறுத்தி அவனை நகரை விட்டே ஒதுக்கி வைத்து விட்டனர்.
மிகுந்த மனவருத்தம் அடைந்து, காட்டிலுள்ள விலங்குகளைக் கொன்று தின்று வாழ்ந்து வந்தான். ஒருநாள் எந்த விலங்குகளும் கிடைக்காமல் போகவே, பசியும், தாகமும் உடலை வருத்த அங்குமிங்கும் அலைந்து, திரிந்து இறுதியாக கௌண்டின்ய முனிவரின் ஆஸ்ரமத்தினை அடைந்தான்.
அப்போது தான் அவர் கங்கை நதியில் குளித்து முடித்து விட்டு வந்து கொண்டிருந்தார். அவரது ஈர உடையிலிருந்த நீர் துளிகள் அவன் மீது பட்ட மாத்திரத்தில் பாவியான அவனுக்கு நற்சிந்தனைகள் உருவாகியது. அவன் முனிவரின் அருகில் சென்று அவரை வணங்கி, மன்னிக்க முடியாத அளவிற்கு பாவம் செய்த எனக்கு அதிலிருந்து முக்தி பெற ஏதேனும் எளிய வழி இருந்தால் தயை கூர்ந்து கூறுங்கள் என்றான்.
அதைக் கேட்ட முனிவர், நான் கூறுவதை கவனமாகக் கேள் !! உனது நல்ல நேரம், இன்னும் சிறிது காலத்தில் மோகினி ஏகாதசி நன்னாள் வரவிருக்கிறது. அதனை கடைபிடிப்பதன் மூலம் உனது பாவ வினைகள் அனைத்தும் நீங்கி புதிய வாழ்வினைப் பெறுவாய் என்று அதனை கடைபிடிக்கும் வழிமுறைகளையும் அவனுக்கு கூறியருளினார்.
அதனை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்த திருஷ்டபுத்தி, அவர் கூறியது போலவே, மோகினி ஏகாதசி விரதத்தினை விதிப்பூர்வமாக கடைபிடித்து நல்வாழ்வை பெற்றான். மேலும், இந்த விரதத்தின் பிரபாவத்தால் இறுதியில் கருடவாகனத்தில் விஷ்ணுலோகத்தை அடையும் பேறு பெற்றான் என மகரிஷி வசிஷ்டர் பிரபு ஸ்ரீராமரிடம் கூறி முடித்தார் என பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறினார்.
இவ்விரதத்தினால் மனிதர்கள் மோகம் என்னும் மாயத்திரை நீங்கி, முக்தியைப் பெறுவதோடு, அவர் வாழ்வில் துரதிர்ஷ்டங்கள், துயரங்கள், தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறுவர்.
மேலும், எவரொருவர் இந்த நன்னாளில் இந்த விரதத்தின் மகாத்மியத்தை உணர்த்தும் இந்தக் கதையை படிக்கிறாரோ / சொல்கிறாரோ / கேட்கிறாரோ அவர்கள் ஓராயிரம் கோ தானம் செய்த புண்ணியத்தினை அடைவர் என்று பகவான் யுதிஷ்டிரரிடம் கூறி முடித்தார்.
***ஓம் நமோ பகவதே வாசுதேவாய***

No comments:

Post a Comment